சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தம்பதியால் பரபரப்பு ஏற்பட்டது.
வேப்பேரியில் அமைந்துள்ள சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு இன்று காலை பத்தரை மணியளவில் வந்த 55 - 60 வயது மதிக்கத்தக்க கணவன் மனைவி இருவர் திடீரென தங்களது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முற்பட்டனர்.
பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இதனை கண்டு உடனடியாக இருவர் மீதும் தண்ணீரை ஊற்றி மீட்டனர். பின்னர், வேப்பேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கணவன் மனைவி இருவரையும் வேப்பேரி காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீஸார் விசாரணை செய்தனர்.
விசாரணையில், இவர்கள் புளியந்தோப்பு ஜே.ஜே நகர் ஆட்டுக்தொட்டி 5-வது தெருவைச் சேர்ந்த தம்பதிகளான ஏழுமலை (60) மற்றும் முத்தம்மா(55) என்பது தெரியவந்தது.
மேலும், இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சில ஆண்டுகளுக்கு முன்பாக புளியந்தோப்பு ஜே.ஜே நகர் பகுதியைச் சேர்ந்த கந்தன் என்பவரிடம் 400 சதுர அடி நிலத்தை இவர்கள் வாங்கியுள்ளனர்.
Also read... பட்ஜெட் பெயரில் 'அல்வா' - தமிழக பட்ஜெட்டை கிண்டலடித்த ஜெயக்குமார்
அந்த நிலத்தில் இருவரும் குடிசை அமைத்து வாழ்ந்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவர் இந்த நிலம் தனக்குச் சொந்தமானது என்றும் உடனடியாக இடத்தை விட்டு காலி செய்யுமாறும் கூறியுள்ளார்.
மேலும், ஏழுமலை - முத்தம்மா தம்பதியினர் விசாரித்தபோது கலியன் என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பாக இந்த நிலத்தை தன்னிடம் விற்பனை செய்து விட்டதாகவும் தற்போது இந்த இடம் தனக்கு சொந்தமானது என்றும் கூறியுள்ளார்.
குறிப்பாக கந்தனிடம் ஏழுமலை - முத்தம்மாள் தம்பதியினர் 400 சதுர அடி நிலத்தை கிரயம் எழுதும்போது தம்பதிகளுக்கு ஆதரவாக கலியன் என்பவர் சாட்சிக் கையெழுத்து போட்டுள்ளார். பின்னர், தம்பதிகளுக்கு தெரியாமல் அவர்களிடமிருந்து கலியன் நிலத்துக்கான பவர் ஆஃப் பட்டாவை தனது பெயரில் மாற்றிக் கொண்டுள்ளார். இதனை வைத்து கலியன் அந்த நிலத்தை பெருமாளுக்கு அப்போதே விற்றுள்ளார் என்பதும் பின்னர் கலியன் இறந்து விட்டார் என்பதும் தெரியவந்தது.
இந்த நிலையில்தான் பெருமாள் நிலம் தனக்கு சொந்தம் எனவும் தம்பதியை நிலத்தை விட்டு வெளியேறுமாறும் கூறியுள்ளார். இந்த மோசடி குறித்து தம்பதி இருவரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தம்பதியினர் இருவரும் புளியந்தோப்பு காவல் நிலையத்தில் பெருமாள் மீது புகார் கொடுத்து, தனது நிலத்தை மீட்டு தரும்படி கூறியுள்ளனர். ஆனால், வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது தங்களால் எதுவும் செய்ய முடியாது என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணத்தினால் தம்பதியினர் இருவரும் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் வந்து தீக்குளிக்க முற்பட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேற்கொண்டு போலீசார் தம்பதியினரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.