திருமுல்லைவாயலில் தம்பதி உயிரிழப்பு... ஆபத்தான வாட்டர் ஹீட்டர் காரணமா? (வீடியோ)

Youtube Video

வீட்டு உபயோகத்திற்கு 650 ரூபாய் கொடுத்து வாங்கிய, பக்கெட்டில் பயன்படுத்தப்படும் வாட்டர் ஹீட்டரில் இருந்து மின்சாரம் பாய்ந்து, மனைவி உடல் கருகி உயிரிழந்துள்ளார். அவரைக் காப்பாற்றச் சென்ற கணவரும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளார். நடந்தது என்ன?

 • Share this:


  திருமுல்லைவாயல் அருகே உள்ள அயப்பாக்கம் வீ்ட்டு வசதி வாரியக் குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் 38 வயதான விஜயகுமார் - 28 வயதான சசிகலா தம்பதி. விஜயகுமார், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு ஆட்டோமொபைல் உதிரி பாக தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இருவரும் கொரோனா ஊரடங்கு காரணமாக விழுப்புரத்தில் உள்ள பாட்டி வீட்டில் தங்கியுள்ளனர். இந்த நிலையில் உறவினரின் ஈமச்சடங்கிற்கு செல்வதற்காக புதன்கிழமை விடுப்பு எடுத்திருந்தார் விஜயகுமார்.

  காலையில் 11 மணி ஆகியும் வீட்டின் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது கணவனும் மனைவியும் சடலமாகக் கிடந்தனர்.

  சசிகலாவின் ஒரு கை முற்றிலும் கருகியிருந்ததால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்குத் தகவல் அளித்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் செவ்வாய்க்கிழமை 650 ரூபாய்க்கு பக்கெட்டில் வைக்கும் சாதாரண கம்பி வாட்டர் ஹீட்டரை விஜயகுமார் வாங்கி வந்தது தெரியவந்துள்ளது.

  புதன்கிழமை காலை 6 மணியளவில், அந்த கம்பி வாட்டர் ஹீட்டரை ஈயப் பானையில் உள்ள தண்ணீரில் வைத்த சசிகலா, சுவிட்சை போட்டுள்ளார். சிறிது நேரம் கழித்து தண்ணீர் சுட்டுள்ளதா எனப் பார்க்க தண்ணீரில் விரல் வைத்த போது மின்சாரம் பாய்ந்து அலறித் துடித்துள்ளார்.

  அவரைக் காப்பாற்றச் சென்ற விஜயகுமார் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் இருவரும் அங்கேயே விழுந்து உயிரிழந்துள்ளனர் என்கின்றனர் போலீசார். இதுபோன்ற கம்பி வாட்டர் ஹீட்டரைப் பயன்படுத்தும் போது ஈயத்தால் ஆன பாத்திரத்தில் குறுக்கே மெலிதான கம்பு அல்லது கழியில் வாட்டர் ஹீட்டரை தொங்க விட வேண்டும்.

  மேலும் படிக்க...தேர்தல் முடியும் வரை ரஜினி வெளியே வர மாட்டார் - ஜோதிடர்

  தண்ணீர் கொதித்ததா எனப் பார்க்கும் முன்பு சுவிட்சை அணைத்து விட்டு சில நொடிகள் கழிந்த பின்பே விரலால் தண்ணீரைத் தொட்டுப் பார்க்க வேண்டும். அப்போதுதான் மின்சாரம் பாய்வது உள்ளிட்ட விபத்துக்களில் இருந்து தப்ப முடியும் என்கின்றனர் மின்சாதனம் பழுது பார்க்கும் நிபுணர்கள்.

  மேலும், விலையை மட்டும் கருத்தில் கொண்டு சாதாரண, உத்தரவாதமில்லாத பொருட்கள் வாங்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். விஜயகுமார், சசிகலா தம்பதியின் சடலங்கள், அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் விபத்து நேர்ந்தது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: