கவர்ச்சியான ஃபேஸ்புக் விளம்பரம்... மொபைல் மோசடி... 50 க்கும் மேற்பட்டோரை ஏமாற்றிய இளம் ஜோடி கைது

மோசடியில் ஈடுபட்ட காதலர்கள்

மோசடி செய்த பணத்தில் இருந்து காதலர்கள் இருவரும் வெளியூர் பயணங்கள் மேற்கொள்வது, புது மொபைல் போன்கள், புது ஆடைகள் மற்றும் புது இருசக்கர வாகனங்கள் வாங்குவது என சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளனர்,

  • Share this:
முகநூலில் விலை உயர்ந்த புதிய மாடல் மொபைல் போன்கள் பாதி விலைக்கு தருவதாகக் கூறி 50-க்கும் மேற்பட்டேரிடம் மோசடி செய்த இளம் ஜோடியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

முகநூலில் புதிய மாடல் விலை உயர்ந்த மொபைல்களை பாதி விலைக்கு தருவதாக கூறி தன்னிடமிருந்து மர்ம நபர்கள் ரூபாய் 12 ஆயிரம் பணம் ஏமாற்றியதாக கிண்டி, லேபர் காலனியைச் சேர்ந்த சூர்யகுமார் (23) என்பவர் சில தினங்களுக்கு முன்பாக அடையாறு சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்தார்.

அதேபோல சைதாப்பேட்டையைச் சேர்ந்த சுதாகர் (24) என்பவர் முகநூலில் விலை உயர்ந்த one plus மொபைலை பாதி விலைக்கு தருவதாக கூறி தன்னிடம் இருந்து ரூபாய் 29 ஆயிரத்து 500 பணத்தை மோசடி செய்ததாக அடையாறு சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்தார்.

வழக்குப்பதிவு செய்த போலீசார் முகநூல் மூலமாக மோசடி செய்த குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்நிலையில், குற்றவாளிகள் பயன்படுத்திய முகநூல் கணக்கு மற்றும் கூகுள் பே,  போன் பே நம்பர்களை வைத்து சோதனை செய்தபோது அந்த நம்பர் பம்மல் பகுதியைச் சேர்ந்த 21 வயதேயான நளினி என்ற பெண்ணுடையது என்பது தெரியவந்தது.

அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டபோது நளினியின் காதலரான குரோம்பேட்டையை அடுத்த நெமிலிச்சேரியைச் சேர்ந்த அரவிந்த் (23) என்பவர்தான் முகநூல் மூலமாக விலை உயர்ந்த மொபைல்களை பாதி விலைக்கு தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அரவிந்தை கைது செய்த போலீசார், காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அரவிந்த் டிப்ளமோ கேட்டரிங் படிப்பை முடித்துவிட்டு அதிக பணம் சம்பாதிப்பதற்காக முகநூல் மூலம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த மோசடியில் தனது காதலியான பம்மலை சேர்ந்த 12 ம் வகுப்பு வரை மட்டுமே படித்த நளினி என்ற பெண்ணையும் கூட்டு சேர்த்துக்கொண்டு இருவரும் சமூக வலைதளங்களின் மூலம் பலரை மோசடி செய்தது தெரியவந்தது.

கஸ்டம்ஸில் தனக்கு தெரிந்த நபர்கள் பணிபுரிவதாகவும் அவர்களின் மூலமாக வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் விலை உயர்ந்த போன்களை பாதி விலைக்கு தாங்கள் விற்பனை செய்வதாகவும் முகநூலில் இவர்கள் விளம்பரம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அதற்கேற்றார் போல் இணையதளத்தில் விலை உயர்ந்த மொபைல் போன்களின் படங்களை எடுத்து அவற்றை முகநூலில் பதிவிட்டு அதன் மூலம் மோசடி வலையை விரித்து வந்துள்ளனர்.

உதாரணமாக ஒரு லட்சம் விலை மதிப்பு கொண்ட மொபைலை முகநூலில் பதிவிட்டு அதனை ரூபாய் 50 ஆயிரத்திற்கு விற்பனை செய்வதாகவும், அதற்கு முன்பணமாக ரூபாய் 25 ஆயிரத்தை தாங்கள் சொல்லும் கூகுள் பே, போன் பே கணக்குகளில் அனுப்ப வேண்டும் எனக்கூறி மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர் என போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இந்த கூகுள் பே மற்றும் போன் பே ஆகியவை அரவிந்த் காதலியான நளினியின் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டவை என்பதும் மேலும் மொபைல்போன் வேண்டுவோர்களிடம் வெவ்வேறு மொபைல் எண்களை பயன்படுத்தி நளினி பேசி வந்ததும், பின்னர் மோசடி செய்த பிறகு அந்த மொபைல் நம்பரை நளினி மாற்றி வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

மேலும், போலீசார் விசாரணையில் 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இதே போல முகநூல் மோசடியில் ஈடுபட்டு கொடுங்கையூர் காவல் துறையினரால் அரவிந்த் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றவர் என்பதும் அப்போது அரவிந்தனை ஜாமினில் எடுத்தவர் அவரது காதலியான நளினி என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

கடந்த 2018-ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை இவர்கள் இருவரும் இணைந்து மோசடி ஈடுப்பட்டு வருவதும், கடந்த 1.5 வருடத்தில் மட்டும் இவர்கள் 50க்கும் மேற்பட்ட நபர்களிடமிருந்து ரூபாய் 10 லட்சத்திற்கும் மேல் மோசடி செய்துள்ளார்கள் என்பதும் தெரிய வந்தது.

மோசடி செய்த பணத்தில் இருந்து காதலர்கள் இருவரும் வெளியூர் பயணங்கள் மேற்கொள்வது, புது மொபைல் போன்கள், புது ஆடைகள் மற்றும் புது இருசக்கர வாகனங்கள் வாங்குவது என சொகுசு வாழ்க்கையை மேற்கொண்டு வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் படிக்க... கதறக் கதற கொடூரமாகத் தாக்கிய கும்பல்: அவமானத்தால் விஷம் குடித்த இளைஞர்

கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து ஏடிஎம் கார்டுகள், மோசடி செய்ய பயன்படுத்தப்பட்ட பல சிம் கார்டுகள், மொபைல் போன்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Published by:Suresh V
First published: