`நெல் கொள்முதல் நிலையங்களில் கட்டாய லஞ்சம்’ - திணறும் விவசாயிகள்

`நெல் கொள்முதல் நிலையங்களில் கட்டாய லஞ்சம்’ - திணறும் விவசாயிகள்

புரேவி, நிவர் புயல் தாக்கத்திலிருந்து மெல்ல மீண்டு வந்த நிலையில், ஜனவரி மாதம் பெய்த பருவம் தவறிய கனமழையில் 5 லட்சம் ஏக்கருக்கு மேல் நெற் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நன்கு விளைந்தும் கைக்கொள்ள முடியாமல்  பெருமளவு மகசூல் இழப்பு விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

புரேவி, நிவர் புயல் தாக்கத்திலிருந்து மெல்ல மீண்டு வந்த நிலையில், ஜனவரி மாதம் பெய்த பருவம் தவறிய கனமழையில் 5 லட்சம் ஏக்கருக்கு மேல் நெற் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நன்கு விளைந்தும் கைக்கொள்ள முடியாமல்  பெருமளவு மகசூல் இழப்பு விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

  • Share this:
காவிரி டெல்டா மாவட்ட பாசனத்திற்கு கடந்த ஆண்டு வழக்கமான ஜுன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. தண்ணீர் வரத்தும் சீராக இருந்ததால் கடந்த 10 ஆண்டுகளோடு ஒப்பிடும்போது கூடுதல் பரப்பளவில் குறுவை நெற் பயிர் சாகுபடி செய்யப்பட்டது. கூடுதல் நெல் விளைச்சல் மற்றும் கொள்முதலும் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து சம்பா, தாளடி நெற் பயிர் சாகுபடியையும் விவசாயிகள் உற்சாகமாக மேற்கொண்டர். புரேவி, நிவர் புயல் தாக்கத்திலிருந்து மெல்ல மீண்டு வந்த நிலையில், ஜனவரி மாதம் பெய்த பருவம் தவறிய கனமழையில் 5 லட்சம் ஏக்கருக்கு மேல் நெற் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நன்கு விளைந்தும் கைக்கொள்ள முடியாமல்  பெருமளவு மகசூல் இழப்பு விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

ஒரு போக சம்பா மற்றும் தாளடி சாகுபடி அறுவடைப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 17% ஈரப்பதம் உள்ள சன்ன ரக நெல் ஒரு குவிண்டாலுக்கு (100 கிலோ) ரூபாய் 1, 958-ம் சாதாரண ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூபாய் 1,918-ம் வழங்கப்படுகிறது.
இதையடுத்து,  தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள் முதல் நிலையங்களும் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள் முதல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 40 கிலோ எடையளவுள்ள ஒரு மூட்டைக்கு ரூ. 20 முதல் ரூ. 40 வரை என குவிண்டாலுக்கு ரூ. 100 வரை விவசாயிகள் லஞ்சம் கொடுக்கும்  நிலை ஏற்பட்டுள்ளது. இதை கட்டாய வசூலாக செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த லஞ்சப் பணத்தையும் நெல் கொள்முதல் செய்யப்படுவதற்கு முன்பாகவே கொடுக்க வேண்டும் என்று கட்டாயப் படுத்தி வாங்குவதாக கூறப்படுகிறது. பணம் கொடுத்தால்தான் விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்கிறார்கள். கொடுக்கவில்லை என்றால் ஏதாவது காரணத்தைச் சொல்லித் தட்டிக் கழிக்கிறார்கள் என்று விவசாயிகள் வேதனைப்படுகிறார்கள்.

கடுமையான இயற்கை பேரிடர் பாதிப்புகளைச் சந்தித்து விவசாயிகள் கொண்டு வரும் நெல்லுக்கு கட்டாய லஞ்சம் கேட்பதால் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் தவிர்த்து விட்டு தனியார் வியாபாரிகளிடம் நெல்லை விற்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுகின்றனர். தனியார் வியாபாரிகள் இதைப் பயன்படுத்தி லாபம் பெறுகின்றனர். இதையடுத்து  பல நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் நெல்லைத் தவிர்த்து விட்டு, வியாபாரிகளின் நெல்லை விவசாயிகளின் நெல்லாக கொள்முதல் கணக்கில் காட்டி விடுகிறார்கள். இதற்காக கிராம நிர்வாக அலுவலர்களிடம் விவசாயிகளின் பெயரில் போலியான ஆவணங்களையும் வியாபாரிகள் பெற்று விடுகிறார்கள். அதை நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் காட்ட தங்களது நெல்லை விவசாயிகள் நெல் போல் கணக்கு காட்டி விற்றுவிடுகிறார்கள்.

அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றி வரும் ஊழியர்கள், சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு குறைந்த அளவே ஊதியம் வழங்கப்படுகிறது. ஒரு சுமைதூக்கும் தொழிலாளருக்கு ரூபாய் 250 கூட கிடைப்பதில்லை. அதே போல், லோடு ஏற்ற வரும் லாரி ஒதுக்கீடு தொடங்கி சாக்குகளைப் பெறுவது ஏற்றி அனுப்பும் வரை சேதாரம் உள்ளிட்டவற்றிற்கும் ஊழியர்களே பொறுப்பேற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை அரசின் கவனத்திற்கு பலமுறை எடுத்துச் சொல்லியும் நடவடிக்கை இல்லை. ஆகையால், நெல் தேக்கத்தைத் தவிர்க்கவும் கொள்முதலுக்கு பிந்தைய செலவினங்களுக்காக சரிகட்டவும் வேறு வழியே இல்லாமல்  விவசாயிகளிடம் வசூல் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது என்று ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார்கள்.

பூச்சி, நோய் தாக்குதல்கள், இயற்கை பேரிடர்கள், மகசூல் இழப்பு என பல்வேறு சவால்களுக்கு பிறகு நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையங்களுக்கு வருகின்றன. இங்கு நடைபெறும் கட்டாய வசூலுக்கு முற்றுப்புள்ளி வைத்தால், அதுவே விவசாயிகளுக்கு செய்யும் பேருதவியாக இருக்கும் என்கிறார்கள் விவசாயிகள்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Ram Sankar
First published: