சுற்றுச்சூழல் பொறியாளரிடமிருந்து லஞ்ச ஒழிப்புத்துறை கோடிக்கணக்கில் பறிமுதல்: அந்தமானில் துணை நடிகைகளுடன் உல்லாசம் - ஐ.எஃப்.எஸ் அதிகாரி போட்டுகொடுத்தாரா?

சுற்றுச்சூழல் பொறியாளரிடமிருந்து லஞ்ச ஒழிப்புத்துறை கோடிக்கணக்கில் பறிமுதல்: அந்தமானில் துணை நடிகைகளுடன் உல்லாசம் - ஐ.எஃப்.எஸ் அதிகாரி போட்டுகொடுத்தாரா?

பொறியாளர் பாண்டியன்

தமிழக சுற்றுச்சூழல் பொறியாளரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் கோடிக்கணக்கான ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் அமைந்துள்ள சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பு பொறியாளர் பாண்டியன் என்பவரது அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். அலுவலகத்தில் மட்டும் 89,000 ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவரது வங்கி கணக்கை சோதனை செய்து பார்த்த போது 38,66,000 ரூபாய் கணக்கில் வராமால் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து சாலிகிராமம் திலகர் தெருவில் உள்ள பாண்டியனின் வீட்டில் ஏ.டி.எஸ்.பி லாவண்யா தலைமையிலான 8 பேர் கொண்ட போலீசார் நேற்று மாலை 5 மணியிலிருந்து இன்று காலை 9 மணி வரையிலும் சோதனை செய்தனர்.

இந்த சோதனையில் 1,32,00,000 ரூபாய் ரொக்கமும் மூன்று கிலோ தங்கம் மற்றும் 3 கிலோ வெள்ளி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாது 7 கோடி ரூபாய் மதிப்புள்ள 18 சொத்து ஆவணங்களும் ஒரு நான்கு சக்கர வாகனமும் மற்றும் 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் கண்காணிப்புப் பொறியாளர் பாண்டியன் பற்றிய தகவல்களும், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் சிக்கிய விவகாரம் தொடர்பாகவும் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

பறிமுதல் செய்யப்பட்ட பணம்


சுற்றுச்சூழல் துறையில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருபவர் பாண்டியன். தற்போது தமிழக கடலோரப் பகுதிகளில், வனப்பகுதிகளில்  நடைபெறும் கட்டுமானம், தொழிற்சாலைகெளுக்கெல்லாம் அனுமதி சான்றிதழ் வழங்குவதில் லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கியது தெரியவந்தது. இவ்வாறாக அனுமதி வாங்கி கொடுப்பதில் பல இந்திய வனத்துறை அதிகாரிகள்(ஐ.எஃப்.எஸ்) தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

அவ்வாறு உடந்தையாக இருக்கும் ஐ.எப்.எஸ் அதிகாரிகள் மற்றும் 3 துணை நடிகைள் உட்பட 6 பெண்களுடன் அந்தமானில் உல்லாசமாக இருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பாண்டியன் முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு பினாமியாக செயல்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பலமுறை லஞ்சம் வாங்குவதாக புகார் அளித்தாலும், பாண்டியனுக்கு ஆதரவாக மாசுக்கட்டுப்பாட்டு உயர் அதிகாரி செயல்படுவதாக தெரியவந்துள்ளது.

இந்த விவகாரத்தில் காவல் துறை உயர் அதிகாரியின் மனைவி, அதே சுற்றுச்சூழல் துறையில் உயரதிகாரியாக இருந்தபோது, பாண்டியன் ஊழல் விவகாரத்தில் தலையிட்டு எச்சரித்துள்ளார். ஆனால் பாண்டியன் அந்த காவல்துறை அதிகாரி மனைவிக்கு, தனக்கு இருக்கும் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி தொல்லை கொடுத்து மாற்றாலாகி செல்ல வைத்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் அந்தமானில் நடிகைகளோடு ஐ.எஃப்.எஸ் அதிகாரிகளை அழைத்து சென்ற விவகாரத்தில், ஆத்திரமடைந்த ஒரு ஐ.எஃப்.எஸ் அதிகாரி லஞ்ச ஒழிப்புத்துறையிடம் தகவல் கொடுத்தது தெரிய வந்துள்ளது.

தற்போது சிக்கிய சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பு பொறியாளர் பாண்டியன் லஞ்ச விவகாரத்தில் தரகர் போன்று செயல்பட்டுள்ளதால்,தொடர்ந்து நடைபெறும் விசாரணையில் பல அதிகாரிகள் சிக்குவார்கள் என லஞ்ச ஒழிப்பு போலிசார் தரப்பில் கூறியுள்ளனர்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: