மதுரை அவனியாபுரம் பிரசன்னா காலனி பகுதியைச் சேர்ந்த பாபுலால் என்பவரின் மகள் 21 வயதான துர்கா தேவி. இவர் மதுரை கீழவெளி பகுதியில் உள்ள ஜவுளிகடையில் உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார். வீட்டில் இருந்து தினமும் பணிக்கு தனது அப்பாவுடன் துர்கா பணிக்கு செல்வது வழக்கம். செவ்வாய்கிழமை காலை அண்ணனுடன் பணிக்கு சென்றுள்ளார் துர்கா.
விமானநிலைய சாலையில் துர்காவின் இருசக்கர வாகனம் சாலையை கடக்க முயன்றுள்ளது. அப்போது மதுரை மாநகராட்சி பகுதிகளில் இருந்து குப்பை எற்றிவந்த லாரி ஒன்று வெள்ளைக்கல் பகுதியில் குப்பையை கொட்ட சென்றுள்ளது. எதிர்பாரதவிதமாக துர்கா சென்ற இருசக்கர வாகனத்தின் பின்பகுதியில் குப்பை லாரி மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய துர்காதேவி சம்பவ இடத்திலையே உடல் நசுங்கி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. விபத்துக்குள்ளான லாரி ஒட்டுநரான மதுரை செல்லூரை சேர்ந்த 42 வயதான சரவணனை போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள். லாரி மோதி இளம்பெண் உடல்நசுங்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.