மருத்துவ சந்தையில் உலாவும் போலி பல்ஸ் ஆக்சிமீட்டர் - மருத்துவர்கள் எச்சரிக்கை

ஆக்சிமீட்டர்

மருந்தகங்களில் பல்ஸ் ஆக்சிமீட்டர் கருவி விற்பனையை முறைப்படுத்த வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

 • Share this:
  உடலில் ஆக்சிஜன் அளவை கண்டறிய பயன்படுத்தும் பல்ஸ் ஆக்சிமீட்டர் கருவிகளில் போலி கருவிகள் சந்தையில் விற்பனை செய்யப்படுவது மருத்துவத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை 400-க்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. இதில் பெரும்பாலானோர் இறுதிக்கட்ட நேரத்தில் மருத்துவமனைக்கு வருவதால் அவர்களுக்கு செயற்கை ஆக்சிஜன் அளித்தும் பலனலளிக்காமல் உயிரிழப்பு நிகழ்வதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

  லேசான அறிகுறியுடன் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இவ்வாறு வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்வோர், அடிக்கடி தங்களது உடலின் ஆக்சிஜன் அளவை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

  அதற்காக பயன்படுத்தப்படும் கருவி தான் பல்ஸ் ஆக்சிமீட்டர். மருந்தகங்களில் 1500 ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படும் இந்த கருவியை பலரும் வாங்கி வீடுகளில் பயன்படுத்தி வருகின்றனர். இதை கை விரல் நுனியில் சில விநாடிகள் வைக்கும் போது ஆக்சிஜன் அளவு, நாடித்துடிப்பு ஆகியவற்றை கணக்கிட்டு காட்டும். உடலில் 94 விழுக்காட்டிற்கு மேல் ஆக்சிஜன் அளவு இருந்தால் நுரையீரல் சீராக இருப்பதாக அர்த்தம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

  அதற்கு கீழ் குறைந்தால் மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தப்படுகிறது. இத்தகைய முக்கியத்துவமிக்க பல்ஸ் ஆக்சிமீட்டர்கள் சந்தையில் போலிகள் நுழைந்திருப்பது தெரியவந்துள்ளது. இவை பென்சில், மரக்குச்சி, கேரட் ஆகியவற்றிற்கு கூட ஆக்சிஜன் அளவு, நாடித்துடிப்பு காட்டுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  போலி பல்ஸ் ஆக்சிமீட்டர்களை தயாரிக்கும் நிறுவனங்களைக் கண்டறிந்து அவற்றின் விற்பனையை தடை செய்வதோடு, மருந்தகங்களில் பல்ஸ் ஆக்சிமீட்டர் கருவி விற்பனையை முறைப்படுத்த வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

  கொரோனா தொற்றாளர்களின் உடலில் ஆக்சிஜன் அளவை கண்டறிய பல்ஸ் ஆக்சிமீட்டரை மட்டும் பயன்படுத்தாமல் ஆர்டிரியல் பிளட் கேஸ் அனலிசஸ் என்ற ரத்த பரிசோதனையை மேற்கொண்டு, அதன்மூலம், ஆக்சிஜன் அளவை கண்டறிவதே சிறந்தது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
  Published by:Vijay R
  First published: