என் அப்பாவை இழந்த 15 நாட்களில் அரசு உதவி கிடச்சிருக்கு- கொரோனாவில் தந்தையை இழந்த சிறுமி நெகிழ்ச்சி

கொரோனாவில் தந்தையை இழந்த சிறுமி

முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கிய உதவித் தொகை நான் கல்வி கற்க உதவியாக இருக்கும் என்று கொரோனாவில் தந்தையை இழந்த சிறுமி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் கொரோனா நோய்த் தொற்றால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுக்கு 3 லட்சம் ரூபாய் வைப்புத் தொகையாகவும், இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு வைப்புத் தொகையாக 5 லட்சம் ரூபாயையும் வழங்கும் திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தில், குழந்தைகளுக்கு அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், இல்லங்கள் மற்றும் விடுதிகளில் சேர முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் குழந்தைகள் கல்லூரி படிப்பை முடிக்கும் வரையிலும் அவர்களுக்கான கல்வி மற்றும் விடுதிச் செலவை அரசே ஏற்றுக் கொள்ளும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றால் தந்தை, தாய் இருவரையும் இழந்த குழந்தைகள் 79 நபர்களும், தாய் தந்தையில் ஒருவரை மட்டும் இழந்த குழந்தைகள் 2,650 நபர்களும் உள்ளனர்.

இத்திட்டத்தின் கீழ், இன்று முதற்கட்டமாக திருவள்ளூர், கரூர் திண்டுக்கல், நாகப்பட்டினம், வேலூர் ஆகிய மாவட்டத்தைச் சேர்ந்த 10 குழந்தைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதி உதவி அளித்தார்.

தலைமைச் செயலகத்தில் உதவித்தொகையை பெற்றுக்கொண்ட கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த பயனாளி சுகந்தி கூறுகையில், "பொருளாதார ரீதியில் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 5 லட்சம் ரூபாயை முதல்வர் வழங்கி இருக்கிறார். குழந்தைகள் கல்வி பயில, வாழ்க்கையை நம்பிக்கையுடன் வாழ இந்த தொகை உதவும் என நம்புகிறேன். உதவித்தொகை வழங்கிய முதல்வருக்கு நன்றி" என்றார்.

உப்பிடமங்கலம், புதுதஞ்சமனூரை சேர்ந்த மாணவி வினோதினி கூறுகையில், ’அரசு பள்ளியில் நான் பிளஸ் 1 படிக்கிறேன். நன்றாக படிப்பேன். என் அப்பா டெய்லராக இருந்தார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். என் அம்மா கூலி வேலை செய்கிறார். நான், என் அம்மா, பாட்டி என மூன்று பேர் இருக்கிறோம். அப்பாவின் திடீர் இழப்பாலும், வறுமையாலும் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் இருந்தோம். இந்த சூழலில் மூன்று லட்சம் ரூபாய் உதவித்தொகை கிடைத்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்பா இறந்து 15 நாட்களில் இந்த உதவி அரசிடம் இருந்து எனக்கு கிடைத்துள்ளது. இது என் கல்வியை தொடர முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளது. ஏர் போர்ஸ் தொடர்பாக படிக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதாக கூறினேன். நன்றாக படிக்க வேண்டும். கல்விக்கு தேவையான உதவிகளை செய்வதாக கூறினார். அவருக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். நான் நன்றாக படிப்பேன். நல்ல வேலைக்கு வந்து, எனது அம்மாவை நன்றாக பார்த்துக் கொள்வேன்" என தெரிவித்தார்.
Published by:Karthick S
First published: