திண்டுக்கல்லில் சளி, காய்ச்சல் நோயாளிகளுக்கு ஊசி போட்ட மருந்துக் கடைக்காரர்-  கடைக்கு சீல் வைப்பு

மாதிரிப்படம்.

திண்டுக்கல்லில் சளி, காய்ச்சல் நோயாளிகளுக்கு மருந்துக்கடையிலேயே ஊசி மருந்து செலுத்தியதையடுத்து மருந்துக் கடைக்கு சீல் வைக்கப்பட்டது. 

 • Share this:
  தமிழகத்தில் கொரோனா முழு ஊரடங்கு அத்தியாவசியத் தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது, மருந்துக் கடைகளுக்கு மட்டும் இரவு வரை செயல்பட அரசு அனுமதியளித்தது.

  ஆனால் இதைப் பயன்படுத்தி ஒரு சில மருந்துகடைகளில் டாக்டர் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து மாத்திரைகள் வழங்குவதாகவும், காய்ச்சல் நோயாளிகளுக்கு ஊசி போடுவதாகவும் திண்டுக்கல் மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அதன் பேரில் நகர் நல அலுவலர் லட்சிய வர்ணா தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் திண்டுக்கல் கிழக்கு ரத வீதியில் உள்ள ஒரு மருந்து கடையில் ஆய்வு செய்தனர்.

  அந்த கடையில் சளி, காய்ச்சல் நோயாளிகளுக்கு ஊசி போட்டதோடு மட்டுமின்றி மருந்து மாத்திரைகளும் விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த கடைக்கு சீல் வைத்ததுடன் கடையின் உரிமையாளர் அப்துல்லாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  இதே போல மேற்கு ரத வீதி, பெரியகடைவீதி ஆகிய பகுதிகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி 6 மளிகை கடைகளில் கொரோனா விதிகளை பின்பற்றாமல் கூட்டம் கூடியதற்காக ஒரு கடைக்கு தலா ரூ.2,000 வீதம் அபராதம் விதித்தனர். மேலும் கடையின் உரிமையாளர்களுக்கும் எச்சரிக்கை விடுத்தனர்.

  கொடைரோடு அருகே மதுபாட்டில்கள் பறிமுதல்:

  திண்டுக்கல் மாவட்டத்தில் மற்றொரு சம்பவத்தில் கொடைரோடு அருகே வீட்டில் பதுக்கப்பட்ட ரூ.1.60 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

  பள்ளபட்டி சிப்காட் பகுதி தேவர் நகரில் மணிகண்டன் மனைவி ஆனந்தஜோதி(40) என்பவர் வீட்டில் மதுபதுக்கி கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது.

  இதனைதொடர்ந்து போலீசார் ஆனந்த ஜோதியை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 1355 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
  Published by:Muthukumar
  First published: