கட்டுக்கடங்காத கொரோனா பாதிப்பு: மகாராஷ்டிராவில் முழு ஊரடங்கு? - ஓரிரு நாளில் முடிவு

பொது முடக்கம்(மாதிரிப் படம்)

மகாராஷ்டிராவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து ஓரிரு நாளில் முடிவெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 • Share this:
  இந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுங்கடங்காமல் அதிகரித்துவருகிறது. நாள் ஒன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தை நெருங்கியுள்ளது. குறிப்பாக, மகாராஷ்டிராவில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 60,000-த்தை நெருங்கியுள்ளது. எனவே, மகாராஷ்டிராவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அங்கு தொற்று பாதிப்பால் 5 லட்சத்துற்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். இந்நிலையில், அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுடன் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.

  அப்போது, தொற்று பரவலைத் தடுக்க கூடுதல் கட்டுப்பாடு விதிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு ஊரடங்கு அமலில் இருந்ததால் தொற்றாளருடன் தொடர்பில் இருந்தவர்களை எளிதில் கண்டறிய முடிந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது, மக்கள் அனைவரும் வெளியில் சுற்றுவதால் தொற்றாளர்களை கண்டறிவதில் சிக்கல் உள்ளதை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்றும், தொற்று பரவலை தடுக்க கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியம் எனவும் உத்தவ் தாக்கரே வலியுறுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  கொரோனா பரவலை தடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு குழுவுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். அதைத்தொடர்ந்து முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்த அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  ஊரடங்கு அமல்படுத்தும்பட்சத்தில், வாழ்வாதாரம் பாதிக்கப்படும் மக்களுக்கு சிறப்பு நிதி தொகுப்பு அறிவிக்க வேண்டும் என்று பா.ஜ.க வலியுறுத்தியுள்ளது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: