தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: நிரம்பும் படுக்கைகள் - முன்தயாரிப்புகளைத் தொடங்கிய சுகாதாரத்துறை

கோப்புப்படம்

கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் அரசு மருத்துவமனைகளில் கொரோனா வார்டு படுக்கைகள் நிரம்பத் தொடங்கியுள்ளன.

  • Share this:
தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தினமும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 2,000-த்தைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நபர்கள் தாங்களாக மருத்துவமனைகளுக்கு சென்று ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கைகளை ஆக்கிரமித்து தேவையுள்ளவர்களுக்கு அந்த இடங்களை மறுக்க வேண்டாம் என்று சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் 1.38 லட்சம் படுக்கைகள் கொரோனா நோயாளிகளுக்காக உள்ளன. இவற்றில் 56 ஆயிரத்து படுக்கைகள் மருத்துவமனைகளிலும் 79 ஆயிரம் படுக்கைகள் கொரோனா பராமரிப்பு மையங்களிலும் உள்ளன. தொற்று பரவல் குறைவாக இருந்தபோது பராமரிப்பு மையங்கள் மூடப்பட்டிருந்தன. எனவே கொரோனா நோயாளிகள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால் தற்போது பரவல் அதிகமாகி வருகிறது. எனவே பராமரிப்பு மையங்களும் அனைத்து மாவட்டங்களிலும் திறக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் எந்த மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று நோயாளியே முடிவு செய்து நேரடியாக மருத்துவமனைக்கு சென்று ஆக்சிஜன் வசதி உள்ள படுக்கைகளை ஆக்கிரமித்து அது தேவையான நோயாளிகளுக்கு கிடைக்காமல் போகும் நிலையை ஏற்படுத்த வேண்டாம் என்று சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுதொடர்பாக நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், ’மாவட்டத்தில் ஒரே மருத்துவமனை உள்ளது என்று நினைத்து அதே இடத்துக்கு புறநோயாளிகள் செல்லவேண்டாம். உதாரணமாக சென்னையில் கிண்டி கிங் மருத்துவமனை அல்லது ஓமந்தூரார் மருத்துவமனைக்கு எல்லா நோயாளிகளும் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. முதலில் நோயாளிகள் ஸ்கிரீனிங் சென்டருக்கு சென்று தங்களை பரிசோதித்த பிறகு மருத்துவர்கள் எங்கு செல்ல வேண்டும் என்று பரிந்துரை செய்கிறார்களோ அந்த இடத்திற்கு செல்வது சரியாக இருக்கும்" என்று கூறினார்.

தமிழகத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார். கடந்த ஆண்டில் தமிழகத்தில் ஜூலை 27 ஆம் தேதி ஒரே நாளில் 6,993 பேர்வரை பதிவானது. ஆகஸ்டு முதல் படிப்படியாக தொற்று எண்ணிக்கை குறைந்து, குறைந்தபட்சமாக இவ்வாண்டில் பிப்ரவரி 23 ஆம் தேதி 438 பேருக்கு மட்டும் தொற்று உறுதியானது. இந்நிலைமாறி மீண்டும் இந்த ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி முதல் தினசரி சராசரி 100 என்கிற அளவில் அதிகரித்து வருகிறது.

அரசு ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் உள்ள 1,618 படுக்கைகளில் 278  பேர் சிகிச்சையில் உள்ளனர். இவர்களில் 169  பேர் கொரோனா தொற்று உறுதியான நிலையிலும் மற்றவர்கள் 109 அறிகுறிகளுடனும் உள்ளனர். 1,618 படுக்கைகள் தவிர மேலும் 300 படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இதே போல்,  அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் 1,200 படுக்கைளில் 100  கோவிட் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அறிகுறிகளுடன் 70 பேர் உள்ளனர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 110 படுக்கைகளில் 63 கோவிட் நோயாளிகளும், அறிகுறிகளுடன் 47 பேரும் உள்ளனர். கிண்டி கிங் கொரோனா மருத்துவமனையில் உள்ள 750  படுக்கைகளில் 490 நோயாளிகளும், ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள 750  படுக்கைகளில் 470  பேரும் உள்ளனர். கிங் மற்றும் ஓமந்தூரார் மருத்துவமனைகள் இரண்டும் பிரத்தியேக கொரோனா மருத்துவமனைகள் என்பதால் தொற்று உறுதியானவர்கள் மட்டுமே இங்கு அனுமதிக்கப்படுவார்கள். பரிசோதனை முடிவுக்காக காத்திருப்போர் இங்கு இருக்கமாட்டார்கள்.

இதுதவிர அத்திப்பட்டில் 6,000 படுக்கைகளுடன் கூடிய பிரத்தியேக கோவிட் பராமரிப்பு மையம் மார்ச் 22-ம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இங்கு 52 பேர் அனுமதிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

இது தவிர அண்ணா பல்கலைக் கழக வளாகம், சென்னை பல்கலைக்கழக வளாகம் மற்றும் பிரெசிடென்சி கல்லூரி வளாகம் உள்ளிட்டவற்றில் சுமார் 2,000 படுக்கைகள் வரை தயார் செய்து தேர்தலுக்கு பிறகு கோவிட் பராமரிப்பு மையங்களாக மாற்ற சென்னை மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: