கொரோனா நிவாரண நிதி ரூ.4000 - முதல்வர் ஸ்டாலினின் முதல் கையெழுத்து!

முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் கையெழுத்து

நாளை முதல் பெண்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்றும், ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும் என்ற ஆணையிலும் அவர் கையெழுத்திட்டுள்ளார்.

 • Share this:
  ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்க முதல் கையெழுத்தாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுதிட்டுள்ளார்.

  தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. இதில், திமுக மட்டும் 125 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றது. இதனை தொடர்ந்து திமுக சட்டமன்ற கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். திமுக சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் வழங்கி ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

  இதனை ஏற்றுக் கொண்ட ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழக முதலமைச்சராக ஸ்டாலினை பதவியேற்க அழைப்பு விடுத்தார். இதன்படி, ஆளுநர் மாளிகையில் இன்று காலை 9 மணிக்கு எளிய முறையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. அப்போது ஸ்டாலினுக்கு ஆளுநர் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அவரை தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து கொண்டனர்.

  இதைத்தொடர்ந்து, மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்திற்கு நேரில் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பின்னர் அண்ணாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, மறைந்த திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் இல்லத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.

  அதனைத்தொடர்ந்து, தலைமை செயலத்திற்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு முதல் கையெழுத்தாக ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுதிட்டுள்ளார். இந்த தொகை இரண்டு தவணைகளாக வழங்கப்படும் என்றும், முதல்கட்டமாக ரூ.2000 இந்த மாதமே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  அதைத்தொடர்ந்து, நாளை முதல் அனைத்து மகளிருக்கும் சாதாரண கட்டண நகரப்பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம், ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும் என்ற கோப்பிலும் அவர் கையெழுத்திட்டுள்ளார்.

  இதைத்தொடர்ந்து, மிக முக்கியமானதாக, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை தமிழக அரசே காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஏற்கும் என்ற கோப்பிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டுள்ளார்.

  இதேபோல், மக்களின் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க ’உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தை உருவாக்கி, அதற்கு ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியை நியமிக்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டுள்ளார்.

  முன்னதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்ததும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதாக அறிவித்து இருந்தார். இதற்காக 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அறிவித்து இருந்தார். அதில் அரிசி ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் திட்டமும், இதேபோல், குடும்ப தலைவிகளுக்கு தலா 1000 ரூபாய் வழங்குவது உள்ளிட்ட இரண்டு திட்டமும் முக்கியமான திட்டமாக பார்க்கப்பட்டது. இதனால், மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றவுடன் இந்த இரண்டு திட்டங்களில் ஏதாவது ஒன்றில் அவர் முதல் கையெழுத்து போடுவதற்கான வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
  Published by:Esakki Raja
  First published: