FULL LOCKDOWN : வெளியூர் செல்ல இ-பதிவு அவசியம்... காலை 10 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி - நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு

மாதிரிப்படம்

தமிழகத்தில் அதிகரித்துவரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தீவிரமாக புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகின்றன.

  • Share this:
    தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்துவருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. அதன் தொடர்சியாக தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்படுகின்றன.

    புதிய கட்டுப்பாடுகள்:

    • தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி, மீன் விற்பனை செய்யும் கடைகள் ஆகியவை மட்டும் குளிர்சாதன வசதி இன்றி நண்பகல் 12.00 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்தக் கடைகள் அனைத்தும் காலை 06.00 மணி முதல் காலை 10.00 மணி வரை மட்டும் இயங்க அனுமதிக்கப்படும்.

    இவற்றில், ஒரே சமயத்தில் 50 சதவிகிதம் வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். மின் வணிக நிறுவனங்கள் மூலம் மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விநியோகம் செய்ய காலை 06.00 மணி முதல் காலை 10.00 மணி வரை மட்டும் அனுமதிக்கப்படும். மேற்கூறிய மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி, மீன் கடைகள் தவிர, இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்படுகிறது.

    • ATM, பெட்ரோல் டீசல் பங்குகள் ஆகியவை எப்போதும் போல செயல்படும்.

    • ஆங்கில மற்றும் நாட்டு மருந்துக் கடைகள் திறக்க வழக்கம்போல் அனுமதிக்கப்படும்.

    • பொது மக்கள் தங்களுக்குத் தேவையான மளிகை, பலசரக்கு, காய்கறிகளை தங்களது வீட்டின் அருகில் உள்ள கடைகளில் வாங்குமாறும், மேற்சொன்ன பொருட்கள் வாங்க அதிக தூரம் பயணிப்பதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள். அவ்வாறு செல்ல முற்படுபவர்கள் தடுக்கப்படுவார்கள்.

    • காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் நண்பகல் 12 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது, காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் செயல்பட அனுமதி இல்லை.

    • தேநீர்க் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது தேநீர்க் கடைகள் இயங்க அனுமதி இல்லை.

    • மின் வணிக நிறுவனங்கள் மதியம் 02.00 மணி முதல் மாலை 06.00 மணி முடிய செயல்பட அனுமதிக்கப்படும்.

    இ-பதிவு முறை

    • வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து தமிழகத்திற்கு வருவோருக்கு இ-பதிவுமுறை கட்டாயமாக்கப்படும்.

    • அத்தியாவசியப் பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, மருத்துவ சிகிச்சை மற்றும் முதியோர்களுக்கான தேவை போன்றவற்றிற்கு மாவட்டங்களுக்குள்ளும் மற்றும் மாவட்டங்களுக்கிடையேயும் பயணம் மேற்கொள்ள இ-பதிவுமுறை கட்டாயமாக்கப்படும். (https://eregister. tnega. org).

    • இ-பதிவு முறை 17.05.2021 காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வரும்.

    பொது

    • ஏற்கெனவே அறிவித்தவாறு மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இரவு 10 மணி முதல் காலை 4 மணி முடிய இரவு நேர ஊரடங்கு தொடர்ந்து அமல்படுத்தப்படும்.

    • ஏற்கெனவே அறிவித்தவாறு முழு ஊரடங்கு ஞாயிற்றுக் கிழமைகளில் (16.05.2021 மற்றும் 23.05.2021) அமல்படுத்தப்படும்.

    • மீன் மற்றும் இறைச்சி கடைகளில் பொதுமக்கள் அதிகம் கூடுவதால், இந்த கடைகளைப் பல்வேறு இடங்களுக்குப் பரவலாக மாற்றம் செய்ய பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    • கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த, பொதுமக்களின் நலன் கருதி தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும் கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும். கொரோனா மேலாண்மைக்கான தேசியவழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைப்பிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு / கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும். நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை / சிகிச்சை பெறவேண்டும்.

    பொதுமக்கள் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுமென கனிவுடன் கேட்டுக்கொள்வதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: