நடமாடும் வண்டிகளில் முட்டை, பிரெட், மளிகைப் பொருள்களை விற்க ஏற்பாடு - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்

மாதிரிப் படம்

நடமாடும் காய்கறி வாகனங்களில் முட்டை, பிரெட், மளிகை பொருட்களை விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  தளர்வுகளற்ற முழு ஊரடங்கு சமயத்தில் அத்தியாவசியப் பொருட்களை விநியோகிப்பது தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் துரைமுருகன், எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் ஆகியோருடன் துறைசார் அதிகாரிகள் பங்கேற்றனர். முழு ஊரடங்கின் போது, காய்கறி போன்ற அத்தியாவசியமான பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய முதலமைச்சர் அறிவுறுத்தினார். ஊரடங்கு சூழலில் நகரங்களை போன்று கிராமங்களுக்கும் வாகனங்கள் மூலம் காய்கறிகளை கொண்டு சேர்க்க அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

  கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், தமிழகம் முழுவதும் திங்கட்கிழமை 6,296 வாகனங்கள் மூலம், 4,900 மெட்ரிக் டன் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்பட்டதாக கூறினார். நடமாடும் காய்கறி வாகனங்களின் எண்ணிக்கை 13,096 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர், விவசாயிகளின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த அரசு அதிகாரிகள் உதவ வேண்டும். நடமாடும் காய்கறி வாகனங்களில் முட்டை, பிரெட், மளிகை பொருட்களை விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றஃஉ தெரிவித்தார்.

  சென்னை கே.கே.நகர் பகுதியில் மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை தொடங்கியது. இதனை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

  மதுரையில் நடமாடும் காய்கறி வாகனங்களை ஆய்வு செய்த வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, காய்கறிகளின் விற்பனை விலையில் ஏதாவது தவறு நேர்ந்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

  நாமக்கல்லில் உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் 80 வாகனங்களில் காய்கறி விற்பனை செய்யப்படுகிறது. குறைந்த விலையில் தரமாக காய்கறிகளை மக்களின் வீடுகளுக்கே கொண்டு சேர்ப்பது மகிழ்ச்சி அளிப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

  ஆரணியில் இயக்கப்படும் 35 நடமாடும் காய்கறி வாகனங்களை மண்டல இணை இயக்குநர் விஜயகுமார் ஆய்வு செய்தார். மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் வீடுகளுக்கே சென்று காய்கறிகளை விற்பனை செய்யும் வாகனங்களை எம்.எல்.ஏ. நிவேதா முருகன் தொடங்கி வைத்தார்.

  இதனிடையே சென்னையில் 3 சக்கர வாகனம் மற்றும் தள்ளுவண்டி மூலமாக காய்கறி, பழங்கள் விற்பனை செய்யும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டால் புகார் அளிக்க தொலைபேசி எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: