மாற்றுத் திறனாளி மகனுக்கு மருந்து வாங்க வந்தவரிடம் போலீஸ்அபராதம்- முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு அபராதம் வாபஸ்

மு.க.ஸ்டாலின்

சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் தன் மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி மகனுக்கு மருந்து வாங்க வெளியில் வாகனத்தில் வந்த போது போலீஸார் அபராதம் விதிக்க, அது முதல்வர் ஸ்டாலின் வரை செல்ல அவர் தலையீட்டினால் போலீஸார் அபராதத்தொகையை திருப்பி அளித்தனர்.

 • Share this:
  தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகமடைந்திருப்பதையடுத்து 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது, இதில் ஆரம்பத்தில் அத்தியாவசியத் தேவைகளுக்காக மளிகை, காய்கறி மற்றும் இறைச்சிக் கடைகளை பகல் 12 மணி வரை திறந்து வைக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது, ஆனால் இதைக் காரணமாக வைத்து எல்லா ஊர்களிலும் வாகனங்களில் ஊர் சுற்றுதல் அதிகரித்தது.

  இதனையடுத்து காலை 6 மணி முதல் 10 மணி வரையே கடைகள் திறந்திருக்கும், அனாவசியமாக ஊர் சுற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு அதன் படி விதியை மீறி இயங்கும் கடைகளுக்கு சீல், அபராதம் உள்ளிட்டவையும் ஊர்சுற்றியவர்கள் மீது வழக்கும் போடப்பட்டு வருகின்றன.

  இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாலச்சந்திரன் என்பவர் மனநலம் பாதிக்கப்பட்ட தன் 9 வயது மாற்றுத்திறனாளி மகனுக்கு மருந்து வாங்க வாகனத்தில் வந்துள்ளார்.

  அப்போது ஊரடங்கு காரணமாக போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது போலீசார் ஹெல்மெட் அணியாமல் வந்ததற்காக பாலச்சந்திரனுக்கு ரூ.500 அபராதம் விதித்தனர்.

  அப்போது போலீசாரிடம் மன நலம் பாதிக்கப்பட்ட மகனுக்காக மருந்து வாங்க 1000 ரூபாய் மட்டும்தான் கொண்டு வந்தேன் அபராதம் கட்டினால் மருந்து வாங்க காசிருக்காது என்றார், ஆனால் போலீசார் அபராதத்தை வசூல் செய்தனர், இதனால் வீடு திரும்பிய பாலச்சந்திரன் இந்த விவகாரத்தை முதல்வரின் ட்விட்டர் பக்கத்துக்கு தெரியப்படுத்தினார்.

  இது முதல்வர் கவனத்துக்குச் சென்றதும் தலைமைச் செயலக அதிகாரிகள், காவல்துறை உயரதிகாரிகள் பாலச்சந்திரனிடம் நடந்த விவரத்தை கேட்டறிந்தனர்.

  இதனையடுத்து திருவள்ளூர் மாவட்ட காவல் ஆய்வாளர் பாலசந்திரன் வீட்டுக்குச் சென்று அபராதத் தொகையை திருப்பி அளித்து வருத்தம் தெரிவித்தார்.

  ஊரடங்கை மீறினால் கடும் நடவடிக்கை:

  ஊரடங்கை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், ஒரேநாளில் 50 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது, இதுவரை 239 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

  ஊரடங்கை மீறியவர்களிடமிருந்து 1 கோடியே 46 லட்சத்து 46, ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறுவோரைக் கண்காணிக்க 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன் தீப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  தமிழகத்தில் ஒரேநாளில் நேற்று 33,905 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 303 பேர் மரணமடைந்துள்ளனர்.
  Published by:Muthukumar
  First published: