தமிழ்நாட்டில் இரவுநேர ஊரடங்கு - சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம்

மாதிரி படம்

தமிழகத்தில் இரவு நேர ஊடங்கு போடுவது குறித்து இப்போது என்னால் கூற முடியாது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்துவருகிறது. இந்திய அளவில் 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவரையில் இல்லாத அளவுக்கு 1.86 லட்சமாக அதிகரித்துள்ளது. தமிழகத்திலும் ஒரு நாளின் கொரோனா பாதிப்பு 8,000-த்தை நெருங்கியுள்ளது. இந்திய அளவில் மகாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  இந்தநிலையில், இந்த விவகாரம் குறித்து பேசிய சுகாதாராத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ‘கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில், பொதுமக்கள் ஒத்துழைப்பு மிக அவசியம். தடுப்பூசி போடுவது மிக முக்கியம் என்பதை பொதுமக்கள் உணர வேண்டும். இரவு நேர ஊரடங்கு போடுவது குறித்து இப்போது என்னால் கூற முடியாது அது கொள்கை சார்ந்த முடிவு. அதிகமான தொற்று ஏற்படும் இடங்களில் தனி கவனம் செலுத்தி வருகிறோம். அடுத்த இரண்டு வாரங்களுக்கு அனைவரும் முகக் கவசம் அணிந்து அரசு விதிமுறைகளை பின்பற்றினால் தொற்று எண்ணிக்கை குறையும். தடுப்பூசி வந்துவிட்டதால் கவசம் அணிய வேண்டாம் என எண்ணக்கூடாது.

  கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்களுக்கு தொற்று ஏற்பட்டால் கூட அதனுடைய பாதிப்பு குறைவாகவே இருக்கும் என வல்லுனர்கள் கூறுகின்றனர். வீட்டிலிருந்து பணியாற்ற வாய்ப்பு உள்ளவர்கள் தொடர்ந்து வீட்டில் இருந்து பணியாற்ற அறிவுறுத்துகிறோம். ரஷ்ய தடுப்பூசிகள் தமிழ்நாட்டுக்கு கிடைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் தமிழ்நாட்டிலும் ஸ்புட்னிக் என்ற ரஷ்ய நாட்டு தடுப்பூசிகள் கிடைக்கும்’ என்று தெரிவித்தார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: