• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பதிவுத் திருமணம் செய்த காதலர்களை பிரிக்க நினைத்த காவல்துறை!

பதிவுத் திருமணம் செய்த காதலர்களை பிரிக்க நினைத்த காவல்துறை!

டயானா மற்றும் விஜயராஜ்

டயானா மற்றும் விஜயராஜ்

சம்பவத்தை அறிந்த ஏ.எஸ்.பி. கார்த்திக் இருவரும் முறையாக பதிவுத் திருமணம் செய்து கொண்டுள்ளதாலும், காதல் ஜோடி விருப்பத்திற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    கன்னியாகுமரி மாவட்டத்தில், பதிவுத் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த காதல் ஜோடியை பிரிக்க, போலீசார் துணைபோன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தூத்தூரைச் சேர்ந்த மீன்பிடி தொழிலாளியான விஜயராஜும், அதே பகுதியை சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரியான டயானாவும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவராயினும், டயானாவின் பெற்றோர் எதிர்த்து தெரிவித்துள்ளனர்.

    இதனை தொடர்ந்து கேரள மாநிலம் ஒட்டசேகர மங்கத்தில் 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விஜயராஜும் - டயானாவும் ரகசியமாக பதிவு திருமணம் செய்துள்ளனர்.

    திருமணத்தை வெளிப்படுத்தாமல் இருவரும் அவரவர் வீட்டில் இருந்த சூழலில், கடந்த சில நாட்களுக்கு முன் டயானாவை, விஜயராஜ் தன் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

    டயானாவின் தந்தை சூசையா அடியாட்களுடன் சென்று, அவரை கட்டாயப்படுத்தி இழுத்து வந்து, வீட்டு சிறையில் வைத்ததாக தெரிகிறது. தனது மனைவியை மீட்டுத் தருமாறு நித்திரவிளை காவல் நிலையத்தில், டிசம்பர் 31-ம் தேதி விஜயராஜ் புகார் அளித்தார்.

    விஜயராஜ் தனது மகளை மிரட்டி வருவதாக, குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சூசையாவும் புகாரளித்தார். அதனை தொடர்ந்து, இரு தரப்பையும் குளச்சல் மகளிர் காவல் நிலையத்திற்கு ஆய்வாளர் வரவழைத்துள்ளார்.

    விஜயராஜுடன் செல்ல டயானா தயாராக இருந்தும், அவரை பெற்றோருடன் அனுப்பி வைக்க, உதவி காவலர்கள் முயற்சித்துள்ளனர்.

    டயானா சத்தம் போட்டு கத்திக்கொண்டு, காரில் ஏற மறுத்து, உருண்டு புரண்டதை, விஜயராஜ் மற்றும் அவரது வழக்கறிஞர்கள் செல்போனில் படம் பிடித்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நிலைமை விபரீதமாவதை உணர்ந்த போலீசார், டயானாவை மீண்டும் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

    இந்நிலையில், இந்த சம்பவத்தை அறிந்த ஏ.எஸ்.பி. கார்த்திக், டயானா மேஜர் என்பதாலும், இருவரும் முறையாக பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளதாலும், காதல் ஜோடி விருப்பத்திற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளார். இதனையடுத்து பல மணி நேர போராட்டத்திற்கு பின் டயானா தனது காதல் கணவருடன் சென்றார்.

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: