மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை தடுத்தே ஆகவேண்டும் - தமிழக சட்டமன்றத்தில் ஒருமித்த குரல்

சட்டப்பேரவை

மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை தடுத்தே ஆக வேண்டும். இதற்காக அனைவரும் ஒன்று திரள வேண்டும்.

  • Share this:
    மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தடுத்தே ஆகவேண்டும் என தமிழக சட்டமன்றத்தில் ஒருமித்த குரல் எழுந்தது.

    தமிழக சட்டமன்றம் கூடியதும், மேகதாது விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை.

    அப்போது பேசிய செல்வப்பெருந்தகை, பத்திரிக்கையில் வந்துள்ள செய்தி டெல்டா மக்களை பாதிக்கும் வகையில் உள்ளது. எனவே மேகதாது விவகாரம் குறித்து அமைச்சர் விளக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

    அவரைத் தொடர்ந்து பிற கட்சி தலைவர்களும் மேகதாது விவகாரம் குறித்து பேசினர். மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை தடுத்தே ஆக வேண்டும். இதற்காக அனைவரும் ஒன்று திரள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் நாகை மாலி கூறினார்.

    மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர் ஜவாஹிருல்லா பேசுகையில், தமிழக மக்களின் உரிமைகளை காக்க, இந்த அரசு என்ன செய்யப் போகிறது? என்று கேள்வி எழுப்பியதுடன், ஒன்றிய அரசு தமிழ்நாடு மீதான தனது நிலைபாட்டை மாற்றிக் கொள்ளலாம் என்ற அச்சம் ஏற்படுகிறது என்றார்.

    அவரைத் தொடர்ந்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஈஸ்வரன், மேகதாதுவில் அணை கட்டினால் ஒரு சொட்டு தண்ணீர் கூட மேட்டூர் அணைக்கு வராது. ஒன்றிய அரசு உள் நோக்கத்துடன் செயல்படுகிறது என்ற சந்தேகம் எழுகிறது. இந்த விகராத்தில் அரசு தீவிரமாக செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    மேகதாதுவில் அணை கட்டினால் காவிரியில் தண்ணீர் வராது. தமிழகத்தின் முக்கிய நீர் ஆதாரம் காவிரி. தேவைப்பாட்டால் தமிழகம் ஒரே குரலில் எழுந்து நிற்கிறது என்ற அடையாள போராட்டம் நடத்தலாம் என்று, பாமக-வின் ஜி.கே.மணி கூறினார்.

    மேகதாதுவில் அணை கட்டக்கூடாது. மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை தமிழக பாஜக எதிர்க்கும். இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கும் பாஜக துணை நிற்கும் என்று எம்.ஆர்.காந்தி உறுதி கூறினார்.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய முயற்சிகளை மேற்கொண்டு, அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சிந்தனைசெல்வன் வலியுறுத்தினார்.

    அவரைத் தொடர்ந்து பேசிய எதிர்கட்சித் துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம், நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கு, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அரசாணை வெளியிடுவதை பெற்றுத்தந்தவர். அரசாணைக்கு முழு வடிவம் பெற்று தருவதற்கு உயர் நீதிமன்றம் சென்றவர். அவரைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமியின் அரசும் உரிய நடவடிக்கை எடுத்தது.

    மேகதாதுவில் அணை கட்டினால் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். தஞ்சை விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் தான், சோற்றில் கை வைக்கும் நிலை உள்ளது. மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மேலும் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து பிரதிநிதிகளுடன் கலந்து ஆலோசித்து நல்ல முடிவு எடுக்க வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக கர்நாடக அரசு செயல்பட்டு வருகிறது என்று கூறினார்.

    Must Read : தமிழ்நாட்டில் 10 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்: அமைச்சர் பொன்முடி

    அவரைத் தொடர்ந்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், இன்று எப்படி ஒரே கருத்தில் ஏகோபித்த ஒற்றுமையுடன் இருக்கிறோமோ அதே போல இறுதி வரை, இந்த பிரச்சினையில் ஒற்றுமையுடன் இருந்தால் நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேகதாதுவில் அணை கட்டுவதை நிறுத்துவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமரைச் சந்தித்துப் பேசினார். கடிதமும் எழுதினார். அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளும் பிரதமரை சந்தித்து இது குறித்து வலியுறுத்தினோம் என்று கூறினார்.
    Published by:Suresh V
    First published: