பிரதமர் மோடி துவங்கி வைக்க இருக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டி நிகழ்வுகளை தமிழகச் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் புறக்கணிப்பதாக அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கு.செல்வப்பெருந்தகை அறிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: உக்ரைன் போர் காரணமாக, 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை ரஷ்யாவில் நடத்தும் முடிவை கைவிடுவதாக சர்வதேச செஸ் கூட்டமைப்பு அறிவித்தது. இதையடுத்து இந்தப் போட்டியைத் தங்கள் நாடுகளில் நடத்துவதற்கு பல நாடுகள் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டன.
அகில இந்திய செஸ் கூட்டமைப்பு, இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட்டை நடத்த வேண்டும் என முன்னெடுத்த முயற்சியின் பலனாக அந்த வாய்ப்பு நமது நாட்டிற்கு கிடைத்தது. 188 நாடுகளில் இருந்து ஏறத்தாழ 2500 வீரர்கள் கலந்துக்கொள்ளும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துவதற்கு மற்ற மாநிலங்கள் தயங்கிய நிலையில், மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழகம் இந்தப் போட்டியை எடுத்து நடத்திட விரும்புகிறது என்று துணிச்சலாக முடிவெடுத்து, அதை வெற்றிகரமாக செயல்படுத்தி தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
இதற்காக தமிழக அரசு ரூ.100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறது. எந்த ஒரு சிறிய குறையும் ஏற்படாத வண்ணம் ஏற்பாடுகள் இருக்க வேண்டும் என்றும் வீரர்களுக்கு வழங்கப்படவுள்ள உணவு முதல் தங்குமிடம் வரை அனைத்து விஷயங்களையும் நேரடியாக கண்காணித்து உரிய உத்தரவுகளை அதிகாரிகளுக்கு வழங்கி வருகிறார் நம்முடைய முதலமைச்சர்.
இன்றும் கூட நிகழ்ச்சி நடைபெறும் நேரு விளையாட்டு அரங்கத்திற்கு முதல்வர் அவர்கள் நேரில் சென்று ஆலோசனைகள் வழங்கியிருப்பது உண்மையிலேயே பாராட்டிற்குரியது.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழகத்தில் நடத்திட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளையும் முன்னெடுப்புகளையும் காங்கிரஸ் பேரியக்கம் பாராட்டி நன்றி தெரிவிக்கிறது, வாழ்த்துகிறது.
அதேநேரத்தில் நாட்டில் உள்ள வரலாறு காணாத விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, பாதுகாப்பு அச்சுறுத்தல், ஆபத்தான அக்னிபாத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது, முறையற்ற ஜி.எஸ்.டி வரியை அமல்படுத்தியது, கூட்டாட்சி தத்துவத்தை சிதைப்பது, தன்னாட்சி பெற்ற அமலாக்கத்துறை, சி.பி.ஐ, மத்திய வருமானவரித்துறையை எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக பயன்படுத்துவது, தமிழகத்திற்கு எதிரான நீட் தேர்வில் பிடிவாதமாக இருப்பது, தமிழக ஆளுநரை தமிழர் நலன் சார்ந்த கொள்கைகளுக்கு எதிராக பேச வைப்பது, தமிழக சட்டமன்றம் நிறைவேற்றிய சட்டமன்ற மசோதாக்களுக்கு அங்கீகாரம் அளிக்காமல் இருப்பது, மக்களவையிலும், மாநிலங்களவையிலும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாநில உரிமைகளுக்கு குரல் கொடுத்தால் ஜனநாயகத்திற்கு முற்றிலும் எதிரான வகையில் அவர்களை சஸ்பெண்ட் செய்வது போன்ற மக்கள் விரோத, ஜனநாயக விரோத செயல்பாடுகளுக்கு துணை போகின்றது ஒன்றிய அரசு.
ஜனநாயகத்திற்கு எதிராகவும், எதிர்க்கட்சிகளின் குரல்வலையை நசுக்கும் வகையிலும் செயல்படும் பாசிச பாஜக அரசின் கொள்கைகளை எதிர்த்து பிரதமர் மோடி துவங்கி வைக்க இருக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டி நிகழ்வுகளை தமிழக சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் புறக்கணிக்கின்றோம்.
இந்த புறக்கணிப்பு ஜனநாயகத்திற்கு விரோதமான அரசை நடத்தும் பிரதமர் மோடிக்கு எதிரானதுதானே தவிர செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு எதிராக அல்ல என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.