வருமான வரி சோதனைக்கு இளைஞர்களின் நம்பிக்கை நாயகன் விஜய் அஞ்சக் கூடாது! ஆதரவுக் கரம் நீட்டும் காங்கிரஸ்

வருமான வரி சோதனைக்கு இளைஞர்களின் நம்பிக்கை நாயகன் விஜய் அஞ்சக் கூடாது! ஆதரவுக் கரம் நீட்டும் காங்கிரஸ்
விஜய்
  • Share this:
வருமான வரித்துறை அச்சுறுத்தல்களுக்கு எல்லாம் தமிழக இளைஞர்களின் நம்பிக்கை நாயகனாக இருக்கிற நடிகர் விஜய் அஞ்சக் கூடாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

பிகில் படத்துக்கு நடிகர் விஜய் வாங்கிய சம்பளம் தொடர்பாக அவரிடம் 30 மணி நேரத்துக்கும் மேலாக வருமான வரித்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். இந்தநிலையில், விஜயிடம் நடைபெறும் வருமான வரித்துறை சோதனை குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘தமிழ் திரைப்பட உலகத்தினரால் இளைய தளபதி என்று அன்புப் பெருக்கோடு அழைக்கப்படுகிற விஜயின் வீடுகளிலும் தயாரிப்பாளர், பைனான்சியர் அன்புச் செழியன் சம்பந்தப்பட்ட மொத்தம் 38 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனைநடத்தியிருக்கிறார்கள்.

நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பில் பங்கு கொண்டிருந்த விஜய், வருமான வரித்துறையினரால் வலுக்கட்டாயமாக சென்னைக்கு அழைத்துவரப்பட்டிருக்கிறார். ஆளும்கட்சிக்கு எதிராக இளைய சமுதாயத்தினரின் கோபத்தை வெளிப்படுத்துகிற வகையில் ‘மெர்சல்’, பிகில் திரைப்படங்களில் சில வசனங்களைப் பேசியது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியதை அனைவரும் அறிவார்கள். விஜயைப் பொறுத்தவரையில் அரசியலுக்கு வருவேன் என்று கூறவில்லையே தவிர, அரசியல் உணர்வோடு படங்களில் கருத்துகளை வெளியிட்டுவருகிறார்.


குறிப்பாக, மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரி, பணமதிப்பு நீக்கம் ஆகியவை குறித்து அவரது படங்களில் விமர்சனம் செய்யப்பட்டது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்த வசனங்களை உடனடியாக நீக்க வேண்டும் என்று விஜயின் பெயருக்கு முன்னால், ஜோசப் விஜய் என்று அழைத்து மதச் சாயம் பூசியதை அனைவரும் அறிவார்கள். இந்தநிலையில், வருமான வரித்துறையினர் விஜய் சம்மந்தப்பட்ட இடங்களில் சோதனை நடத்துவது ஏதோ ஒரு வகையில் அவரை அச்சுறுத்துகிற நடவடிக்கையாக இருக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன. ஒருபக்கம் ரஜினிகாந்த், வருமானத்தை மறைத்த விவகாரத்தில் குறைந்தபட்ச அபராதமாக ரூ.62 லட்சம் வசூலிக்க வருமான வரித்துறை ஆணையிட்டுள்ளது. தமது வருமானத்தை சரிகட்டுவதற்காக ரஜினிகாந்த் 2002-2003-ல் ரூ.2.63 கோடியை 18 சதவீத வட்டிக்கு கடன் கொடுத்து 1.99 லட்ச ரூபாய் லாபமடைந்திருப்பதாக கணக்கில் கூறியிருக்கார்.


ஆனால், 2004-205-ம் ஆண்டிலோ 1.71 கோடி ரூபாய் வட்டிக்கு கடன் கொடுத்ததில் வசூல் ஆகாததால் வாராக் கடனாக மாறி 33 லட்ச ரூபாய் நஷ்டம் அடைந்ததாக வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டியுள்ளார். இதன்மூலம், வருமான வரித்துறையின் கிடுக்குப் பிடியில் ரஜினிகாந்த் சிக்கி கொண்டிருப்பது குறித்த செய்திகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. இச்சூழலில் தான் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கான ஆதரவை பகிரங்கமாக வெளிப்படுத்தியிருக்கிறார். இவை அனைத்துமே ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை என்று எவரும் கூறிவிட முடியாது. இந்தநிலையில், தமிழக இளைஞர்கள் பட்டாளத்தின் கவர்ச்சிமிக்க நடிகரான விஜய், மத்திய வருமான வரித்துறையின் சோதனைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார். இதை ஏதோ வருமான வரித்துறையின் சோதனையாக மட்டும் கருத முடியாது.

 

ஏனெனில் மத்திய பா.ஜ.க அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிற வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறை போன்ற அமைப்புகள் கடந்த சில வருடங்களாக எத்தகைய சோதனைகளை எத்தனை முறை தமிழகத்தில் நடத்தியது என்பதையும், அதனுடைய தொடர் நடவடிக்கைகள் எந்த நிலையில் இருப்பதையும் ஒப்பிட்டு பார்த்தால் விஜய் மீது வருமான வரித்துறை எடுத்திருக்கும் நடவடிக்கைகளின் உள்நோக்கத்தை அறிந்துகொள்ளலாம். எனவே, விஜய் மீது வருமான வரித்துறை தொடுத்திருக்கும் சோதனைகள் மூலம் அவரது உரிமைக் குரலை ஒடுக்கி, அச்சுறுத்தி விடலாம் என மத்திய பா.ஜ.க அரசு கருதுமேயானால் அது வெறும் பகல் கனவாகத்தான் முடியும். இத்தகைய அச்சுறுத்தல்களுக்கெல்லாம் தமிழக இளைஞர்களின் நம்பிக்கை நாயகனாக இருக்கிற விஜய் அஞ்சக் கூடாது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Also see:

First published: February 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading