நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் கூட்டணி சார்பிலான பிரதமர் வேட்பாளர் தேர்வு செய்யப்படுவார் என்று புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் நாராயணசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவின்போது, திமுக தலைவர் ஸ்டாலின் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என தனது விருப்பத்தை தெரிவித்தார். இது சர்ச்சையை உருவாக்கி உள்ளது.
யார் பிரதமராக வர வேண்டும் என்று சொல்வதற்கு ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் உரிமை உண்டு. நாட்டை ஆள ராகுல் காந்திக்கு திறமை இருக்கிறது என்பதை உறுதியாக கூறுகிறேன். மத்தியில் மதச்சார்பற்ற அணிகள் எல்லாம் ஒருங்கிணைந்து கூட்டம் நடத்தின. அதில் அனைவரும் ஒருங்கிணைந்து தேர்தலை சந்திப்பது என முடிவு எடுக்கப்பட்டது.
நாடாளுமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றிபெறும் கட்சிக்கு பிரதமர் பதவி வாய்ப்பை வழங்க வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் கூறினார்.
பிரதமர் யார் என்பதை இப்போது முடிவுசெய்ய வேண்டாம் என்று சரத்பவார் கூறியது அவரது சொந்த கருத்து. தேர்தலுக்குப் பின் பிரதமர் யார் என்பதை முடிவு செய்து கொள்ளலாம் என்று மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் கூறுகின்றனர்.
பா.ஜ.க. ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதுதான் மதச்சார்பற்ற கட்சிகளின் எண்ணம். யார் பிரதமர் என்பதை கூட்டணிக் கட்சி தலைவர்கள் பேசி முடிவு செய்வார்கள். பிரதமர் வேட்பாளர் தொடர்பாக தனது கட்சியின் எண்ணத்தை சொல்ல ஸ்டாலினுக்கு உரிமை உண்டு. இதை யாரும் விமர்சனம் செய்ய வேண்டிய அவசியமில்லை என்றார் நாராயணசாமி.
Also watch
Published by:DS Gopinath
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.