காங்கிரஸில் உச்சகட்டத்தில் கோஷ்டி மோதல் - சத்யமூர்த்தி பவனில் தொடரும் போராட்டம்

காங்கிரஸ்

சென்னை ராயப்பேட்டையிலுள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு தொடர்பாக எம்.பி மாணிக்கம் தாகூர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

 • Share this:
  தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, தி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகள் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டை நிறைவு செய்துள்ளன. தொகுதி பங்கீடு முடிந்தநிலையில் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகள் வேட்பாளர்களையும் முடிவு செய்து அறிவித்துள்ளன. தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸில் பணக்காரர்களாக பார்த்து வேட்பாளர்களாக அறிவிக்கப்படுகின்றனர் என்று கூறி இன்று காலை முதல் சென்னை ராயப்பேட்டையில் காங்கிரஸ் அலுவலகத்தில் போராட்டம் நடைபெற்றுவருகிறது. கட்சியிலிருந்து விலகி மீண்டும் கட்சியில் இணைந்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுகிறது.

  வசதி படைத்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது என்று எம்.பி விஷ்ணு பிரசாத் காங்கிரஸ் அலுவலகத்தில் இன்று காலையில் அவரது ஆதரவாளர்களுடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவருக்கு போட்டியாக கே.எஸ்.அழகிரி ஆதரவாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில், விலவங்கோடு தொகுதியில் போட்டியிடுவதற்கு விஜயதாரணிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கக்கூடாது என்று ஒரு தரப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து தெரிவிக்கும் போராட்டக்காரர்கள், ‘விலவங்கோடு தொகுதியில் 10 ஆண்டுகளாக விஜயதாரணி எம்.பியாக இருந்துவருகிறார். அவர், தொகுதி பக்கமே செல்லவதில்லை. கொரோனா காலத்தில் கூட தொகுதி பக்கம் செல்லவில்லை. அவர், சென்னையிலேயே நிரந்தரமாக தங்கியுள்ளார்’ என்று தெரிவித்தனர். இதற்கிடையில், காங்கிரஸ் எம்.பிக்கள் ஒருவொருக்கொருவர் விமர்சித்து ட்விட்டரும் பதிவிட்டுவருகின்றனர்.


  விஷ்ணு பிரசாத்தின் போராட்டம் குறித்த எம்.பி மாணிக்கம்தாகூரின் ட்விட்டர் பதிவில், ‘அன்னை சோனியாகாந்தி தலைமையில் நடக்கும் மத்திய தேர்தல் குழுவில் எடுக்கும் முடிவு ஒவ்வொரு உண்மையான காங்கிரஸ் தொண்டனுக்கும் நியாமான முடிவாககிடைக்கும். ஆனால், சிலர் விளம்பரதிற்காக காங்கிரஸ் இயக்கத்துக்கு மிக பெரிய இழிவை ஏற்படுத்தி எதிரிகளுக்கு உதவும் துரோகிகளை கண்டுகொள்ளுங்கள். கட்சிக்காக உழைத்த முன்னாள் மாவட்டதலைவருக்கு அதுவும் சில நூறு ஒட்டில் தோல்வியடைந்தவருக்கு மீண்டும் தொகுதியை வாங்ககூடாது என சண்டை போட்டு வரவிடமால் தடுத்தவர்கள் இன்று நியாயம் பேசலாமா? தன் தந்தையால் MLA இப்ப MP வாங்கியவர்கள் இப்ப மகன்களுக்கு கூடாது என தொண்டர்களை ஏமாற்றலாமா? அல்லது பாஜக+ அதிமுகவுக்கு உதவ இந்த குழப்பமா? நான் உட்கட்சி விவகாரத்தை பொது வழியில் இந்த நாள்வரை பேசியதில்லை. ஆனால் இன்று நாடாகங்களின் சீன் அதிகமாக இருப்பதால் உண்மையின் சில துளிகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


  இதற்கிடையில் எம்.பி ஜோதிமணி பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘காங்கிரஸ் தொண்டர்களின் மனதில் தற்போது கொந்தளித்துக்கொண்டிருக்கின்ற உணர்வுகளை நான் அறிவேன். தொகுதி,வேட்பாளர் தேர்வு வெளிப்படையாக இல்லை.நிறைய
  தவறு நடக்கிறது. தட்டிக்கேட்டேன். பதிலில்லை. தொண்டர்களின் இரத்தத்தை குடிக்கும் மனசாட்சியற்ற தலைவர்கள் நியாயத்தின் குரலை செவிமடுக்கவில்லை. எனது தலைவர் ராகுல் காந்தி பணம் தான் பிரதானமென நினைத்திருந்தால் இன்று நான் எம்.பி கிடையாது. இந்த தலைவர்கள் தொண்டர்களுக்கு மட்டுமல்ல தன்னை நம்பிய தலைவருக்கும் துரோகம் செய்கிறார்கள். நமது கட்சியையும், நமது தலைவரின் கௌரவத்தையும் தொண்டர்களாகிய நாம் தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். உண்மையான கட்சி விசுவாசிகளுக்கு கண்முன்னாள் இழைக்கப்படும் துரோகத்தை கண்டு எனது இரத்தம் கொதிக்கிறது. எனது யுத்தத்தை நான் தொடர்வேன். தொண்டர்களின் குரலாக தொடர்ந்து ஒலிப்பேன். நடப்பது நடக்கட்டும். எதிரிகளை மட்டுமல்ல துரோகிகளையும் எதிர்கொள்ளும் வலிமை நமக்கு உண்டு’ என்று குறிப்பிட்டுள்ளார்.

  தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் காங்கிஸில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுவதற்கு முன்னரே காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: