ஐயூஎம்எல்லுக்கு ஒதுக்கிய வாணியம்பாடியில் கட்டாயம் கை சின்னத்தில் போட்டியிடுவேன் - காங்கிரஸ் நிர்வாகி பேச்சால் பரபரப்பு

ஐயூஎம்எல்லுக்கு ஒதுக்கிய வாணியம்பாடியில் கட்டாயம் கை சின்னத்தில் போட்டியிடுவேன் - காங்கிரஸ் நிர்வாகி பேச்சால் பரபரப்பு

அஸ்லம் பாஷா

திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரக்கூடிய நிலையில் தற்பொழுது காங்கிரஸ் சிறுபான்மை மாநிலத் தலைவர் அஸ்லம் பாஷா செய்தியாளர்கள் சந்திப்பு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
    தி.மு.க கூட்டணியில் வாணியம்பாடி தொகுதி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒதுக்கி வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில், வாணியம்பாடி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக காங்கிரஸ் தமிழக சிறுபான்மை பிரிவு மாநிலத் தலைவர் அஸ்லம் பாஷா கை சின்னத்தில் தான் போட்டியிட இருப்பதாக செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளும், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. தி.மு.க கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீக் தொகுதிக்கு வாணியம்பாடி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது இந்தநிலையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் முஹம்மது நயீம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர், ஏணி சின்னத்தில் போட்டியிடுகின்றார்.

    இந்த நிலையில் அவருக்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரக்கூடிய நிலையில் தற்பொழுது காங்கிரஸ் சிறுபான்மை மாநிலத் தலைவர் அஸ்லம் பாஷா செய்தியாளர்கள் சந்திப்பு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘வாணியம்பாடி தொகுதியில் நான் போட்டியிடுவது நிச்சயம். காங்கிரஸ் சார்பில் கை சின்னத்தில் போட்டியிடுகின்றேன் என வேட்பு மனு தாக்கல் செய்யப் போகிறேன். அதற்காக ராகுல்காந்தி மற்றும் தமிழக தலைவர் அழகிரி கண்டிப்பாக எனக்காக வாணியம்பாடி தொகுதி ஒதுக்குவார்கள் என கூறினார்.

    அதே நேரத்தில் நான் சுயேட்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்ய மாட்டேன் எனவும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மீதும், தமிழக தலைவர் அழகிரி மீதும் மிகுந்த நம்பிக்கை உள்ளது. கடைசி நேரத்தில் எது வேண்டுமானாலும் நடக்கும். ஆகையால் கண்டிப்பாக வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதியில் கை சின்னத்தில் நான் போட்டியிடுவேன் என உறுதியோடு கூறினார்.

    மேலும் பாசிச கட்சியாக இருக்கக்கூடிய பாஜக கூட்டணியை வீழ்த்துவதற்கு காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும். ஆகையால் வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதியில் நான் போட்டியிடுவேன் என ஆணித்தரமாக கூறி உள்ளதால் தற்பொழுது வாணியம்பாடி தொகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: