திருச்சி மாநகரம் முதலியார் சத்திரத்தில், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக சின்டெக்ஸ் குடிநீர் தொட்டியை,
காங்கிரஸ் மூத்த தலைவரும், திருச்சி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான திருநாவுக்கரசர் இன்று திறந்து வைத்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், ‘தடைபட்டுள்ள திருச்சி ரயில்வே சந்திப்பு மேம்பாலத்தின் நிறைவுப் பணிகள் இன்னும் ஆறு மாதத்தில் முடிவடையும். பின்னர் மக்கள் பயன்பாட்டிற்கு தரப்படும். கனவு காண்பதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. தமிழ்நாட்டில் உள்ள மக்களவை தொகுதிகள், 39 =திலும் வெற்றிப் பெற முடியும் என பாஜக தலைவர் கூறியுள்ளார்.
அவர் கனவு காண யாரும் தடைபோட முடியாது. ஆனால் அது எதார்த்தத்தில் நடப்பதற்கு வாய்ப்பில்லை. அதனால், பாவம் அவர் கனவாவது காணட்டும். ஆதீனங்கள் அரசியல் பேசலாம். அதற்கு யாரும் தடை போடவில்லை. மக்களைப் பிளவுப்படுத்தும் விதத்தில் ஆதீனகர்த்தாக்கள், சர்ச் மற்றும் பள்ளிவாசல் உள்ளிட்ட அமைப்பினர் பேசக்கூடாது.
கருத்துச் சுதந்திரம் என்பது அடுத்தவர் மூக்கு நுனி வரை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சாதி, மதம் இவற்றால் மக்களை பிளவுப்படுத்தி வன்முறையை ஏற்படுத்தும் விதத்தில் பேசக்கூடாது. வரம்பு மீறாமல் நாகரீகம், கலாச்சாரத்தை பாதுகாக்கும் விதத்தில் பேச வேண்டும்’ என்றார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.