Home /News /tamil-nadu /

ராகுல் காந்தி விவகாரம்: சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட கே.எஸ்.அழகிரி, ஈ.வி.கே.எஸ் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கைது

ராகுல் காந்தி விவகாரம்: சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட கே.எஸ்.அழகிரி, ஈ.வி.கே.எஸ் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கைது

காங்கிரஸ் தலைவர்கள்

காங்கிரஸ் தலைவர்கள்

நேஷ்னல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் காங்கிரஸ் தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வழக்கில் தொடர்ந்து மூன்றாவது நாளாக ராகுல் காந்தியை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இதனை கண்டித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் சின்னமலையில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தொண்டர்கள் கே.எஸ்.அழகிரி, தினேஷ் குண்டாராவ், செல்வப்பெருந்தகை, ஈ.வி.எஸ் இளங்கோவன், தங்கபாலு மற்றும் 500க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டு உள்ளனர்..

அப்பொழுது மேடையில் பேசிய கே.எஸ்.அழகிரி, ‘சென்னையில் 3 நாளாக போராட்டம் நடைபெற்ற நிலையில் நாளை மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடைபெறும். மாவட்டத் தலைவர்களை 3 நாட்களாக கசக்கி பிழிந்து இந்த போராட்டம் நடைபெறுகிறது. முதல்வர், துரைமுருகனுடன் அவ்வப்போது ஆளுநர் மாளிகைக்கு செல்கிறார்.

நாங்கள் ஆளுநர் மாளிகை கேட் வரை மட்டும் செல்கிறோம். காவல்துறையினர் எங்களை தடுக்க வேண்டாம். ஆளுநர் பதவி மீது மரியாதை, விருப்பம் எங்களுக்கு உண்டு. நேசனல் ஹெரால்டு என்பது காங்கிரஸ் கட்சியின் சொத்து. அதை ஆர்எஸ் எஸ், பாஜக பெயரில் எழுதித் தர முடியாது.

அறக்கட்டளை விதிகள்படியே நேசனல் ஹெரால்ட் பங்குகளை கட்சிப் பெயரில் இல்லாமல் கட்சியினர் பெயரில் வைத்துள்ளோம். இதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை. காங்கிரஸ் நாத்திக கட்சியோ, இந்து மத எதிர்ப்பு கட்சியோ அல்ல. சாதி, மத வேறுபாடுகளை எதிர்க்கும் கட்சி. இந்திய எல்லைக்குள் வாழும் அனைவரும் இந்தியரே என்றார் காந்தி.

வேறொரு மதம் குறித்து கருத்து சொல்லக் கூடாது. அந்த மதத்துடன் சண்டை போடுவது தவறு. உத்தரப் பிரதேசத்தில் போராட்டம் நடத்திய இசுலாமியர்களின் வீடுகளை பொக்லைன், ஜேசிபி வைத்து  இடித்துள்னர். அது ஆக்கிரமிப்பு வீடு என பல வருடமாக ஆட்சி நடத்திய பாஜக அரசுக்கு இப்போதுதான் தெரியுமா..?

மேகதாது அணைக்கு மத்திய நீர்வளத்துறை வரைவுத் திட்ட அனுமதி கொடுத்ததே தவறு. மேகதாது அணையால் காவிரி டெல்டா பாலைவனமாகப் போகிறது. கொள்கைதான் வெல்லும். பாஜகவின் சந்தர்பவாதம் ஒருபோதும் வெற்றி பெறாது’ என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ‘ராகுலிடம் 10, 12 மணி நேரம் விசாரணை நடத்துகிறார்கள். மிக மோசமான குற்றவாளிகள் கூட ஓரிரு மணி நேரம்தான் விசாரிக்கப்படுவர். ஆனால் ராகுலை அவமதிக்க, பயமுறுத்த 10 மணி நேரம் விசாரணை நடத்துவதாக ஆடிட்டர்கள் கூறுகின்றனர். பாஜக பெண் செய்தித்தொடர்பாளர் பேச்சால் இசுலாமிய நாடுகளில் எதிர்ப்பு எழுந்ததை, திசை திருப்ப இந்த விசாரணை.

அகில இந்திய காங்கிரஸ் அலுவலகத்தில் புகுந்து தாக்குதல் நடத்த அனுமதி கொடுத்தது யார்? நாட்டுக்கு விடுதலை பெற்றுத் தந்த கட்சியின் தலைமை இடம் அது. நாங்கள் வாங்கித் தந்த சுதந்திரத்தால்தான் மோடி பிரதமராகி ஜனநாயகத்தில் இன்று ஆட்டம் போட முடிகிறது.

உலகின் அனைத்து இசுலாமிய நாடுகளும் இந்தியாவிற்கு எதிராக திரும்பி விட்டது. மோடி மீண்டும் பிரதமரானால் நாடு சிதறுண்டு போகும். கொடி பிடிக்கும் காங்கிரஸ் காரனுக்கு ஆயுதம் ஏந்தவும் தெரியும். மகாத்மா மட்டும் இல்லை நேதாஜியும் எங்கள் தலைவர்தான்.

அடுத்த தேர்தலில் மோடிக்கு டெபாசிட் கிடைக்காது. இதனை தொடர்ந்து ஆளுநர் மாளிகை முற்றுகையில் ஈடுவதற்காக, காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பணைகளை தாண்டி செல்ல முயன்றதால் அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. மேலும் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், தங்கபாலு ஆகியோரை கைது செய்தனர்.
Published by:Karthick S
First published:

Tags: Congress, Rahul gandhi

அடுத்த செய்தி