முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பாஜக மட்டுமல்ல சீமானிடமும் பெண்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்: ஜோதிமணி!

பாஜக மட்டுமல்ல சீமானிடமும் பெண்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்: ஜோதிமணி!

சீமான்

சீமான்

சீமான் மீது கடந்த காலங்களில் இது போன்ற  பாலியல் குற்றச்சாட்டு எழுந்திருக்கின்றன. தனது குற்றத்தை  மறைக்கவே சீமான் ராகவனின் பாலியல் குற்றத்தை வெளிப்படையாக ஆதரிக்கிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது என்று ஜோதிமணி கூறியுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பாஜகவின் முன்னாள் மாநில பொதுச் செயலாளர் ராகவனின் பாலியல் குற்றத்தையும் சுரண்டலையும் அப்பட்டமாக ஆதரிக்கும் சீமானின்  செயல் வெட்கக் கேடானது என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோதிமணி விமர்சித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கே.டி. ராகவனுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “  இது சமூக குப்பை, ராகவனின் அனுமதியில்லாமல் அவரது தனிப்பட்ட இடங்களில் வீடியோ வைத்து எடுப்பது என்பதுதான் சமூக அவலம். இந்த வீடியோவை வெளியிட்ட நபரை கைது செய்திருக்க வேண்டும்” என்றும் உலகில் யாருமே செய்யாததையா அவர் செய்துவிட்டார் என்றும் பதில் அளித்தார்.

சீமானின் இந்த பதிலுக்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “சீமான் ஒரு அரசியல் கட்சியின் தலைவர். அவர் இப்படி  பொறுப்பில்லாமல் பெண்களுக்கு எதிரான  பாலியல் குற்றங்களை, சுரண்டல்களை ஆதரிப்பது அதிர்ச்சியளிக்கிறது.

நாம் தமிழர் கட்சியில் இருக்கும் கள்ளமில்லாத இளைஞர்களின் மனதில்  பெண்களுக்கு எதிரான பாலியல்  குற்றங்கள் சரியென்ற மனநிலையை  சீமான் உருவாக்குகிறார்” என்று விமர்சித்துள்ள ஜோதிமணி, இது ஒட்டுமொத்த  பெண்களுக்கும் தமிழ் சமூகத்துக்கும் ஆபத்தாகிவிடக் கூடிய அபாயம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ‘பாஜக மட்டுமல்லாது  இப்படிப்பட்ட ஆபாசமான, அருவருக்கத்தக்க,  ஆபத்தான செயல்பாடுகளை  ஆதரிக்கும் சீமான் போன்றவர்களிடமும் பெண்கள், தமிழ்சமூகம்  விழிப்புடன் இருக்க வேண்டும். இவர்கள் எல்லாம்  பெண்களின் பாதுகாப்பு, மரியாதை , கண்ணியம்  பற்றி துளிக்கூட கவலைப்படாதவர்கள், பெண்களை பாலியல் ரீதியான வன்முறைக்கு, ஒடுக்குமுறைக்கு உள்ளாக்குவதை  ஆதரிப்பவர்கள்’ என்றும் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: யாரும் செய்யாததையா ராகவன் செய்துவிட்டார்? வீடியோ வெளியிட்டவரை கைது செய்யுங்க- சீமான்

காலங்காலமாக  பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், குற்றங்கள், ஒடுக்குமுறைகள், சுரண்டல்கள் நடந்துகொண்டுதான்  இருக்கின்றன. அதற்காக அவையெல்லாம் சரியென்று ஆகிவிடுமா என்றும்  பாலியல் குற்றவாளிகள் எல்லாம் நிரபராதிகள் ஆகிவிடுவார்களா என்றும் ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார். பாலியல் வன்முறைகளுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடந்துகொண்டு இருப்பதாகவும் அதன் பயனாகவே பெண்கள் இன்று அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில்  தங்களது பங்களிப்பை செலுத்தி வருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க: வீடுகளுக்குள் புகுந்து திருட்டு: பெண்கள் உட்பட 4 பேர் கைது!

மேலும், பெண்களிடம் முறைகேடாக  நடந்துகொள்ளும் அயோக்கியர்களையும்  அவர்களை அப்பட்டமாக ஆதரிப்பவர்களையும் தமிழ் சமூகம்  ஒருபோதும் எற்றுக்கொள்ளாது. இது தான் சீமான் போன்றவர்களுக்கு உறுத்துகிறது.  சீமான் மீது கடந்த காலங்களில் இது போன்ற  பாலியல் குற்றச்சாட்டு எழுந்திருக்கின்றன.  பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில்  புகார் அளித்துள்ளார்.  தனது குற்றத்தை  மறைக்கவே சீமான் ராகவனின் பாலியல் குற்றத்தை வெளிப்படையாக ஆதரிக்கிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது” என்றும் பாஜகவின் பி டீம் என்பதை சீமான்  மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் என்றும் ஜோதிமணி விமர்சித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Jothimani, Seeman