ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பட்டியலின மணமக்களுக்கு 3 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை : காங்கிரஸ் தேர்தல் அறிக்கை (முழு விவரம்)

பட்டியலின மணமக்களுக்கு 3 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை : காங்கிரஸ் தேர்தல் அறிக்கை (முழு விவரம்)

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்ட சிறு, குறு, நுண் தொழில் முனைவோர், வங்கிகளில் பெற்ற கடனுக்காக 50 சதவிகிதத்தைத் தமிழக அரசுமானியமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :

ஜாதி மறுப்பு திருமணங்களில்,  மணமக்களில் ஒருவர் பட்டியலினத்தவராக இருந்தால், அவர்களைப் பாராட்டி மூன்று லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என்பன உள்ளிட்ட சிறப்பம்சங்களுடன், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையைகே.எஸ்.அழகிரி வெளியிட்டார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான " 26 தலைப்புகள் கொண்ட காங்கிரஸ் கட்சியின் தேர்தல்" அறிக்கையை வெளியிட்டார்.

பின்னர் நிருபர்களிடம் கே.எஸ்.அழகிரி கூறியதாவது:

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை அரசு எப்படி நடைபெற வேண்டும், அரசின் நிர்வாகம் எப்படி செயல்படவேண்டும், மக்களுக்கு அரசின் திட்டங்கள் எப்படி கொண்டு சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஆலோசனைகள் இடம்பெற்றுள்ளன. காங்கிரஸ் கட்சியின் நோக்கமே தமிழகத்தின் வளர்ச்சி. தமிழகத்தில்வெளிபடையான நிர்வாகம், நல்ல கல்வி, விவசாயத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும். அதுதான் காங்கிரஸ் கட்சியின் நோக்கம். பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதில் காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளது.

திமுக தேர்தல் அறிக்கையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேர் விடுதலை குறித்து வலியுறுத்திவோம் என்று அறிவித்து உள்ளது. அதிலிருந்து காங்கிரஸ் மாறுபடுகிறது. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை சட்டப்படி நடக்கவேண்டும். இலவசங்கள் அறிவிப்பது தவறில்லை. இலவசங்கள் மக்கள் தேவைக்காக இருக்க வேண்டும்.  காங்கிரஸ் கட்சி எங்கள் எண்ணத்தை தேர்தல் அறிக்கை மூலமாக வெளிப்படுத்தி இருக்கிறோம். திமுக ஆட்சிக்கு வந்த உடன் நாங்கள் அதை வலியுறுத்துவோம்.

குடியுரிமை சட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் அதிமுக ஆதரவு அளித்தது‌. தற்போது அதிமுக தேர்தல் அறிக்கையில் குடியுரிமை சட்ட திருத்ததை திருப்ப பெற வலியுறுத்துவோம் என்று இடம்பெற்றுள்ளது. மக்கள் ஏமாற மாட்டார்கள். காங்கிரஸ் கட்சியில் உழைத்தவர்களுக்கு தான் சீட் வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர்களில் மூன்று பேர் மட்டுமே வசதி படைத்தவர்கள்.

அறந்தாங்கி தொகுதியில், திருநாவுக்கரசர் மகனை தவிர வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. காங்கிரஸ் மாவட்ட தலைவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு, நிரூபிக்க பட்டால் அவர் மீது கட்சி நடவடிக்கை எடுக்கும். சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் மீதமுள்ள 4 வேட்பாளர் பட்டியல் இன்று மாலை அல்லது நாளை வெளியிடப்படும். ராகுல் காந்தி தமிழகத்திற்கு தேர்தல் பரப்புரைக்கு வருவார். விரைவில் அறிவிப்பு வெளியாகும்.” இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய சிறப்பம்சங்கள் விபரம் பின்வருமாறு :-

1).  அ.தி.மு.க.வில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஒப்பந்தக்காரர்கள்கூட்டணி அமைத்து ஒப்பந்தங்களைத் தொகுப்பதற்கு வழிவகுத்த விதிகள்மாற்றியமைக்கப்படும்

2). முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கண்ட கனவின்படி, உள்ளாட்சிகளுக்குமீண்டும் அதிகாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

3). திறமையும், வலிமையும், அர்ப்பணிப்பும் கொண்ட தமிழக இளைஞர்கள்வேலைவாய்ப்பு பெறும் வகையில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

4) தொழில் துறையில் பின்தங்கிய மாவட்டங்களில் இருந்து தொழில்தொடங்க விரும்புவோருக்கு, நிலம், மின்சாரம் போன்ற தொழில்ஆதாரத் தேவைகளுக்கு விலையில் சலுகையும் கட்டணத்தில் மானியமும்வழங்கப்படும். குறைந்தது 5 ஆண்டுகளுக்கு வரி விடுமுறை.

5). தமிழக அரசுப் பணியிலும், தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணிகளிலும் 74% தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கே ஒதுக்கப்படும் வகையில் தனிச் சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்கப்படும். உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

6). பணமதிப்பிழப்பு, குளறுபடியான ஜிஎஸ்டி மற்றும் கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்ட சிறு, குறு, நுண் தொழில் முனைவோர், வங்கிகளில் பெற்ற கடனுக்காக 50 சதவிகிதத்தைத் தமிழக அரசுமானியமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

7). தமிழகத்தில் புதிய அரசு அமைந்ததும் பூரண மதுவிலக்கைஅமல் படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

8) கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பெண்களுக்குச் சமவாய்ப்பு வழங்கநடவடிக்கை எடுக்கப்படும்.

9). மண்டல் கமிஷன் பரிந்துரையின்படி, மீனவர்களைப் பழங்குடியினர்பட்டியலில் சேர்க்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.

10). விவசாயிகளை வஞ்சிக்கும் மத்திய அரசின் 3 விவசாயச் சட்டங்களுக்குப்பதிலாக, தமிழகத்தில் விவசாயிகளைப் பாதுகாக்கும் புதிய சட்டங்கள்கொண்டு வரப்படும்.

11). காவிரி நீர் மேலாண்மை வாரியத்தையும், ஒழுங்காற்றுக் குழுவையும்தன்னாட்சி அமைப்பாகச் செயல்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றஉத்தரவைச் செயல்படுத்தக் காங்கிரஸ் கட்சி நடவடிக்கை மேற்கொள்ளும்.

12) நீட் தேர்வை ரத்து செய்ய அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். மருத்துவம் உள்ளிட்ட அனைத்து தொழில் கல்லூரிகளிலும் அரசுப் பள்ளி மாணவர்கள் சேருவதற்கு ஒதுக்கப்பட்டுள்ள 7.5 சதவிகிதம் ஒதுக்கீட்டை 10 சதவிகிதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

13). முதியோர் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படுவதோடு, அதனை அஞ்சல்துறை மூலம் நேரடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

14). இந்து அறநிலையத் துறைக்கு உட்பட்ட திருக்கோயில்களில், இந்து மதத்தைச் சேர்ந்த அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்க நடவடிக்கைஎடுக்கப்படும்.

15). முதியோர் உதவித் தொகை பெறுவோர் குடும்பத் தலைவராக இருந்தால், அவர்களது வீடுகளுக்கே சென்று ரேசன் பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

16). தமிழகத்தில் மின் தேவையைக் கணக்கிட்டு, அதற்கு ஏற்றாற்போல் புதியமின் திட்டங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

17). சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்கள் ஆணவப் படுகொலைசெய்யப்படுவதைத் தடுக்க தனிச் சிறப்புச் சட்டங்கள் கொண்டு வரப்படும்.

18). மாதம் ஒருமுறை விசைத்தறியாளர்களுக்கு மின் கணக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

19). திருநங்கைகளுக்கான நல்வாழ்வை உறுதிப்படுத்த, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சீர்திருத்தங்கள் செய்யப்படும்.

20). பணியின்போது பாதிக்கப்படும் பத்திரிகையாளர்களுக்கு உரிய நிவாரணமும், பணியின் போது இறக்க நேரிடும் பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிவாரண நிதியும் உயர்த்தி வழங்கநடவடிக்கை எடுக்கப்படும்.

21). சாதி மறுப்புத் திருமணம், கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் முன்னுரிமை இருப்பதைப்போல, வேலைவாய்ப்புகளிலும் முன்னுரிமை வழங்கப்படும்‌. மணமக்களில் ஒருவர் பட்டியலினத்தவராக இருந்தால், அவர்களைப் பாராட்டி ரூபாய். 3 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும்.

22). மருத்துவ துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

23). தமிழகம் முழுவதும் ஒன்றிய அளவில் நியாய விலை மருந்துக் கடைகள் உருவாக்கப்பட்டு, அதன் மூலம் பொதுவான மருந்து கிடைக்க வழிவகை செய்யப்படும்

24). 31.12.2020 வரை மாணவர்கள் பெற்ற கல்விக்கடன் அனைத்தும் ரத்து செய்யப்படும்.

25). நீட் தேர்வில் உள் ஒதுக்கீடு 10%ஆக உயர்த்தப்படும்.

26). மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் 2500 உதவித்தொகை வழங்கப்படும்.

27).  மெரினா கடற்கரை சாலையில் மகாத்மா காந்தி சிலைக்குப் பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கும் இடையில்நடிகர் சிவாஜி கணேசன் சிலை மீண்டும் வைக்கப்படும். சிவாஜி கணேசன் பிறந்த நாளான அக்டோபர் 1 ஆம் நாள், கலை எழுச்சி நாளாக தமிழக அரசின் சார்பில் கொண்டாட ஆவன செய்யப்படும்.

28) காவல்நிலைய மரணங்களை தடுக்க சிறப்புச்சட்டம் இயற்றப்படும்.

29)  கோவில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சராக நடவடிக்கை எடுக்கப்படும்.

30). ஆட்டோ ஓட்டுனர்களுக்கு மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் போல் இல்லாமல் தனியாக (CESH) வரி வசூலிக்கப்பட்ட நிதி ஏறக்குறைய 400 கோடி ரூபாய் அளவுக்கு உள்ளது. தமிழகத்தில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் இருந்தாலும், அதில் 40 ஆயிரம் ஆட்டோ ஓட்டுனர்கள் மட்டுமே ஆட்டோ ஓட்டுனர் வாரியத்தில் பதிவு செய்துள்ளனர். ஆட்டோ தொழிலாளிகளுக்குப் பாண்டிச்சேரியில் போனஸ் வழங்குவது போலவே, தமிழகத்திலும் வழங்கப்பட வேண்டும். ஆட்டோ ஓட்டுனர்கள் தங்களது வருடாந்திர புதுப்பித்தல் சமயத்தில் ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.

31). தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோவில்களுக்குச் சொந்தமான கட்டிடங்கள், நிலங்கள் கணக்கெடுக்கப்பட்டு ஆக்கிரமிப்பு செய்திருப்பார்கள் வெளியேற்றுவதோடு, அவற்றை முறையாகப் பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

32). எந்தவித தொழிலும் செய்ய முடியாத மாற்றுத் திறனாளிகள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கென்று ஒரு சிறப்புச் சமூக பாதுகாப்புத் திட்டம் உருவாக்கப்படும். அதன் மூலமாக அவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.2,500 உதவித் தொகையாக வழங்க திட்டங்கள் தீட்டப்படும்.

காங்கிரஸ் தேதல் அறிக்கை முழு விவரம்: 

இவ்வாறு காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by:Suresh V
First published:

Tags: Congress election Manifesto, Election 2021, KS Alagiri, TN Assembly Election 2021