முகப்பு /செய்தி /தமிழ்நாடு / டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் - அண்ணாமலை வலியுறுத்தல்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் - அண்ணாமலை வலியுறுத்தல்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 2 தேர்வை ரத்து செய்து மீண்டும் முறையாக தேர்வு நடத்தக்கோரி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India
  • Editor default picture
    reported by :
  • Editor default picture
    published by :Janvi

டிஎன்பிஎஸ்சி கடந்த பிப்ரவரி 25 ஆம் நாள் நடத்திய குரூப் 2 மற்றும் 2A தேர்வில் ஏற்பட்ட பல்வேறு பிரச்னைகளில் காரணத்தினால் தேர்வர்கள் பெரும் அவதி அடைந்தனர். அதற்குக் கண்டம் தெரிவித்தும் நடைபெற்ற குரூப் 2 தேர்வை ரத்து செய்து மீண்டும் தேர்வை முறையாக நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது குறித்த அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசுத் துறைகளில், குரூப் 2 மற்றும் 2A பணிகளில் காலியாக உள்ள 5,446 பணியிடங்களை நிரப்புவதற்காக, கடந்த சனிக்கிழமை 25.02.2023 அன்று நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 பிரதானத் தேர்வில், பல முறைகேடுகள் நடந்துள்ளதாகத் தேர்வு எழுதிய போட்டியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அன்று காலை நடைபெற்ற தமிழ் தகுதித்தாள் தேர்வு மையங்களுக்கு, கண்காணிப்பாளர்கள் மற்றும் விடைத்தாள்கள் வர தாமதமாகியிருக்கிறது. பல மையங்களில் விடைத்தாள்கள் வரிசை எண் மாற்றி வழங்கப்பட்டுள்ளது.

தேர்வு ஏற்கனவே தாமதமாக ஆரம்பித்ததால், போட்டியாளர்கள், தங்கள் பதிவெண்களைக் கவனிக்க நேரமில்லாமல், விடைத்தாளில் விடைகளைப் பதிவு செய்திருக்கின்றனர். பின்னர் மீண்டும் விடைத்தாள்களை வரிசை எண் படி மாற்றி வழங்கியிருக்கின்றனர். இந்தக் குளறுபடிகளிடையே, போட்டியாளர்களுக்குக் கொடுக்கப்பட்ட விடைத் தாள்களில் ஏற்கனவே வினாக்களுக்கான பதில்கள் நிரப்பப்பட்டு இருந்ததாகவும், அவற்றைத் திருத்த கண்காணிப்பாளர்கள் அனுமதிக்கவில்லை எனவும் போட்டியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால், மீண்டும் தேர்வு தாமதமாகியிருக்கிறது. இதையடுத்து, மாலை நடந்த தேர்வும் தாமதமாகத் தொடங்கியிருக்கிறது.

தேர்வாணையம் செய்த தவறுகளுக்கு, அரசுப் பணிகளுக்காக பல நாட்கள் தயாராகிய போட்டியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசுப் பணிகளுக்கான தேர்வாணையம், இத்தனை அலட்சியப் போக்குடன் செயல்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அதைவிட அதிர்ச்சியளிப்பது, தேர்தல் ஆணையத்தின் விளக்கம். “முற்பகல் தேர்வானது கட்டாயத் தமிழ் தகுதி தேர்வாகும். ஆகையால், இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவது மட்டுமே போதுமானது. இந்த மதிப்பெண்கள் தரவரிசைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது” என்றொரு விளக்கத்தைத் தேர்வாணையம் அளித்திருக்கிறது. பல லட்சம் மாணவர்களின் கனவான ஒரு முக்கியமான தேர்வுக்கு, தேர்வாணையம் தருகிற மரியாதை இதுதான்.

‘கட்டாயத் தமிழ்த் தேர்வு’ என்பது வெறும் ஒரு சடங்குதான், அதற்கு எந்த மதிப்பும் இல்லை என்று சொல்லியிருக்கிறது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம். திறனற்ற திமுக அரசுத் தரப்பில் இருந்து, இதற்கு யாரும் இதுவரை விளக்கம் தரவில்லை. அரசுப் பணித் தேர்வுகளுக்காகத் தீவிரமாக படித்துப் பயிற்சி எடுத்த இளைஞர்களை, இதை விட யாரும் அசிங்கப்படுத்தி விட முடியாது. தமிழக இளைஞர்கள் தங்களின் அத்தனை நாள் உழைப்பை வீணடித்துவிட்ட கோபத்தில் இருக்கிறார்கள். இத்தனை முறைகேடுகளுடன் நடந்த தேர்வு முடிவுகள், நியாயமாக இருக்கப் போவதில்லை என்று வருத்தப்படுகிறார்கள்.

அது மட்டுமல்லாது, கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள், 2023 பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று உறுதியளித்த திமுக அரசு, இன்னும் தேர்வு முடிவுகளை வெளியிடாமல் காலம் தாழ்த்தி வருகிறது. அரசுப் பணித் தேர்வுகளுக்காக அயராது உழைத்து, தயாராகும் இளைஞர்களின் எதிர்காலத்தோடு விளையாடிக் கொண்டிருக்கிறது திறனற்ற திமுக அரசு.

Also Read : வடமாநில தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தல்? வதந்தி பரப்பினால் நடவடிக்கை... எச்சரிக்கை விடுத்த அமைச்சர்!

ஒட்டு மொத்த அமைச்சர்களையும், அதிகாரிகளையும் ஈரோடு இடைத் தேர்தல் பணியில் ஈடுபடுத்தி, அரசு இயந்திரத்தை முடக்கிய திமுக, உடனடியாக பாதிக்கப்பட்ட இளைஞர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். தேர்வாணையத்தின் செயல்பாடுகளில் நம்பிக்கையிழந்து விட்ட இளைஞர் சமுதாயத்தின் நம்பிக்கையை மீட்க, உடனடியாக, அவர்கள் கோரிக்கையான, மறுதேர்வு நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும். போட்டித் தேர்வு என்பது கண்துடைப்பு அல்ல இளைஞர்களின் எதிர்காலம் என்பதை உணர்ந்து, இனியாவது, இது போன்ற முறைகேடுகளையும் குளறுபடிகளையும் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தமிழக பாஜக சார்பில் வலியுறுத்துகிறேன் என்று அறிக்கையில் குறிப்பிட்டு வெளியிட்டுள்ளார்.

First published:

Tags: Annamalai, Group Exams, TNPSC