சென்னையில் தொழிலதிபர் மீது தாக்குதல்.. காவல் ஆய்வாளர் மீது பகீர் புகார்..

Youtube Video

சென்னை பல்லாவரம் அருகே, கட்டிடப் பணிக்கான பணத்தைத் திருப்பிக் கேட்ட தொழிலதிபரை, காவல் ஆய்வாளர் தனது உறவினர்கள் மூலம் இரும்புக் கம்பியால் தாக்கியதாக காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. நடந்தது என்ன?

 • Share this:


  சென்னை பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் 51 வயதான வர்கீஸ். இவருக்கு சொந்தமான அனகாபுத்தூரில் பிரம்மாண்டமான கல்யாண மண்டபம் உள்ளது. இவர் ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர், அச்சரப்பாக்கம் கலால்துறை காவல் ஆய்வாளர் ஆன்டனி ஸ்டாலின். இவர் செங்கல்பட்டு காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு ஆய்வாளராகப் பணிபுரிந்தவர். சில மாதங்களுக்கு முன்பு சுங்கச் சாவடி ஒன்றில் துப்பாக்கியால் சுட்டதால், கலால்துறைக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

  இந்த ஸ்டாலினுக்கு, தான் வசிக்கும் திருவள்ளுவர் தெருவிலேயே 1 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டினைக் கடந்த ஆண்டு கட்டி கொடுத்துள்ளார் வர்கீஸ். கட்டுமானப் பணிக்கு 94 லட்சம் ரூபாய் வரை பணம் கொடுத்த ஸ்டாலின், மீதி 6 லட்சம் ரூபாயைத் தர மறுத்தார்.

  இதுகுறித்து சங்கர் நகர் காவல்நிலையத்தில் 2020ம் ஆண்டு மார்ச் மாதம் வர்கீஸ் புகாரளித்தார். ஆத்திரமடைந்த ஸ்டாலின் ஆதரவாளர்கள் 12 பேர் வர்கீஸ் வீட்டின் மீது கல்லால் தாக்கினர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் கடந்த ஆண்டு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

  இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு 7 மணியளவில், வீட்டு வாசலில் வர்கீஸ் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஆன்டனி ஸ்டாலினின் உறவினர்களான நெல்சன், ஆண்ட்ரூஸ், சேவியர் , இரும்புக் கம்பியால் வர்கீசைத் தாக்கியுள்ளனர். அதைத் தடுக்கப் பாய்ந்த உறவினர் சஞ்சயின் இடது கையிலும் அந்தக் கும்பல் தாக்கி விட்டுத் தப்பியோடி விட்டது.

  காயமடைந்த சஞ்சய், வர்கீஸ் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுதொடர்பாக, சங்கர் நகர் காவல்நிலையத்தில் வர்கீஸ் தரப்பில் மீண்டும் புகாரளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சங்கர் நகர் காவல்நிலைய காவல் ஆய்வாளரும், ஆன்டனி ஸ்டாலினும் நண்பர்கள் என்பதால் எவ்வித நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள் என தாக்கிய கும்பல் தெரிவித்துள்ளது.

  மேலும் படிக்க...விவாதத்திற்கு நான் ரெடி நீங்க ரெடியா? ஸ்டாலின் கேள்வி

  இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட ஆன்டனி ஸ்டாலினின் உறவினர்களான நெல்சன், ஆண்ட்ரூஸ், சேவியர் ஆகியோரை தேடி வருகின்றனர். அதேநேரம் தாக்குதல் சம்பவம் குறித்து ஆய்வாளர் ஆன்டனி ஸ்டாலினை நமது செய்தியாளர் தொடர்பு கொண்ட போது அவர் அழைப்பை ஏற்கவில்லை. தொழிலதிபர் மற்றும் அவரது உறவினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் அப்புகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Vaijayanthi S
  First published: