சாட்டை துரைமுருகன் மீது புகார் அளித்தவர் திமுகவில் இணைந்தார்

சாட்டை துரைமுருகன் மீது புகார் அளித்தவர் திமுகவில் இணைந்தார்

மொத்தம் 3 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஒரு வழக்கில் மட்டும் துரைமுருகனுக்கு பிணை கிடைத்துள்ளது. மற்ற மூவரும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

  • Share this:
தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை அவதூறு செய்து சமூகவலைதளத்தில் பதிவிட்ட நபர் திமுகவில் இணைந்துள்ளார். இவர் கொடுத்த மிரட்டல் புகாரில் யூட்யூப்பர் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி மாநகரம் கே.கே.நகரில் உள்ள கார் பழுது நீக்கும் மைய உரிமையாளர் வினோத். இவர் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், சீமான் ஆகியோரை அவதூறாக விமர்சனம் செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இதைக் கண்டு கோபமடைந்து  வினோத்தின் கார் பழுது நீக்கும் நிலையத்திற்கு சென்று சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோர் அவரிடம் வாக்குவாதம் செய்தனர். அவதூறு பதிவை நீக்கி, மறுப்பு பதிவை வெளியிடச் செய்தனர். வினோத்தும் அப்போது மன்னிப்பு கேட்டு பதிவிட்டார். இதை சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோர் செல்போனில் படம் பிடித்தனர்.

பின்னர், சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோர் தனது கார் பழுது நீக்கும் நிலையத்திற்கு வந்து, தன்னை மிரட்டியதாக திருச்சி கே.கே.நகர் காவல் நிலையத்தில் வினோத் புகார் அளித்தார். இந்த வழக்கில், யூட்யூப்பர் சாட்டை துரைமுருகன், நாம் தமிழர் கட்சியின் வினோத், மகிழன் சந்தோஷ், சரவணன் ஆகியோர் கடந்த 11ம் தேதி கைது செய்யப்பட்டு முசிறி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். திருச்சி 2வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட நால்வருக்கும் கடந்த 15ம் தேதி பிணை வழங்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதே நேரத்தில், அமைச்சர் செந்தில்பாலாஜியை மணல் கடத்தலோடு தொடர்புப்படுத்தி அவதூறாக பேசியதாக கரூர் மாவட்ட திமுக வழக்குரைஞர் அணி கொடுத்த புகாரின் பேரில் கரூர் போலீசார் பதிவு செய்த வழக்கில் சாட்டை துரைமுருகன் மட்டும் மீண்டும் கைது செய்யப்பட்டு, லால்குடி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

திருச்சி கே.கே.நகர் வழக்கைத் தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியை அவதூறாக பேசிய வழக்கில் தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் காவல் நிலைய போலீசாராலும் ஏற்கனவே துரைமுருகன் கைது செய்யப்பட்டார்.

Also read: கோயம்பேடு மெட்ரோ - பெயர் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!

மொத்தம் 3 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஒரு வழக்கில் மட்டும் துரைமுருகனுக்கு பிணை கிடைத்துள்ளது. மற்ற மூவரும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில், சாட்டை துரைமுருகன் மீது முதலில் புகார் அளித்த திருச்சி கே.கே.நகர் பழுது நீக்கும் நிலைய உரிமையாளர் வினோத், அண்மையில் திமுக முதன்மைச் செயலாளர், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவைச் சந்தித்து திமுகவில் இணைந்துள்ளார். இதை வினோத் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Published by:Esakki Raja
First published: