சென்னை அயனாவரம் திரு.விக நகர் பஸ் நிலையம் அருகே உள்ள சமுதாயக் கிணறுகளை மாநகராட்சிப் பணியாளர்கள் தூர்வாரி, விழிப்புணர்வூட்டும் ஓவியங்களை வரைந்திருப்பது பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் என அனைவரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளன.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த மாநகராட்சியும் குடிநீர் வாரியமும் இணைந்து சிறப்புக் குழுக்களை உருவாக்கின. சென்னையில் இதுவரை 3,15,276 கட்டடங்களில் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்பு உள்ளனவா என அக்குழுக்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கட்டடங்களிலுள்ள மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகளில் சிறு பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன், அந்தக் கட்டமைப்புகளே இல்லாத இடங்களில் புதியதாய் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மாநகராட்சியின் இந்நடவடிக்கையால் பயன்பாட்டில் இருந்த 330 சமுதாய கிணறுகள் தூர்வாரி புனரமைக்கப்பட்டுள்ளன. மேலும், இக்கிணறுகளுக்கு அருகிலுள்ள வணிக கட்டடங்கள், தனியார் கட்டடங்களில் இருந்து மழைநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம், மழை நீரைச் சேகரித்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, பொது மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையே இணக்கம் ஏற்படும் வகையில் மாநகராட்சிப் பணியாளர்கள் கிணற்றைச் சுற்றியுள்ள சுவர்களை அலங்கரிக்கும் வகையில் பொதுக் கிணற்றுச் சுவர்களில் மயில் வடிவத்திலும் அன்னப்பாத்திரம் வடிவத்திலும் ஓவியங்கள் வரைந்துள்ளனர்.
இது குறித்து அயனாவரம் மாநகராட்சி இணை இயக்குநர் நாராயனன் நம்மிடம் பேசியபோது, பாலடைந்த கிணறுகளில் குப்பைகள் போட்டு மூடப்பட்டிருந்தன. இதனால் பல இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து காணப்பட்டது. பொது மக்களுக்கு மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. ’நீரின்றி அமையாது உலகு’ என்பதை உணர்த்தும் விழிப்புணர்வுகளை மக்களிடம் எடுத்துச் செல்கிறோம் என்றார்.
மேலும், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் இதற்குக் கிடைத்த வரவேற்பையும் பாராட்டையும் தொடர்ந்து, பெரம்பூர், கீழ்ப்பாக்கம், ஓட்டேரி ஆகிய பகுதிகளிலுள்ள பிற பொதுக் கிணறுகளிலும் ஓவியம் வரைய ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்தார். சென்னை புறநகர்ப் பகுதிகள் மட்டுமின்றி சென்னை முழுக்க இதைச் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
Also see:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.