சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த ஜோசப் என்பவர், ராயல் மார்க்கெட்டிங் என்ற பெயரில் கீழ்பாக்கம், தி.நகர் ஆகிய பகுதிகளில் மெத்தைகள், தலையணைகள் விற்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளார். 2018ஆம் ஆண்டு பேஸ்புக் மூலம், லண்டனில் இருந்து எலிசபெத் என்ற பெண் ஜோசப்பைத் தொடர்பு கொண்டு அறிமுகமாகியுள்ளார்.
தான் லண்டனில் மருந்து தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருவதாகவும் தனக்கு மருத்துவ குணம் கொண்ட ஃபோலிக் எண்ணெய் தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார். அந்த எண்ணெய் மும்பையில் கிடைப்பதாகவும் ஒரு லிட்டர் எண்ணெய் விலை 2 லட்சம் ரூபாய். அதற்கு கமிஷன் 2 லட்சம் ரூபாய் தருவதாகவும் கூறி ஆசை காட்டியுள்ளார்.
எலிசபெத் கூறியபடி மும்பையைச் சேர்ந்த சுனிதா என்பவரை ஜோசப் தொடர்பு கொண்டார். அவர் குறைந்தபட்சம் 200 லிட்டர் ஆர்டர் செய்ய வேண்டும்; அதற்கான தொகை 40 லட்சம் ரூபாயையும் முன்கூட்டியே செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து ஜோசப் லண்டனில் உள்ள எலிசபெத்திடம் கூற, அவரும் எண்ணெயின் மாதிரியைப் பரிசோதிக்க தனது நிறுவன நபர்கள் வருவதாகத் தெரிவித்தார்.
அதன்படி எலிசபெத் நிறுவன நபர்கள் எனக் கூறி சிலர் வந்து, ஜோசப் மும்பையில் இருந்து தருவித்திருந்த மாதிரி எண்ணெயைப் பரிசோதித்து உறுதி செய்தனர். தொடர்ந்து எலிசபெத் சென்னை விமான நிலையம் வந்து, அ்ங்கு ஜோசப்பை வரவழைத்தார். அவரிடம் 200 லிட்டர் எண்ணெயையும் வாங்கிக் கொள்வதாக உறுதியளித்து விட்டு புறப்பட்டு விட்டார்.
அதை நம்பிய ஜோசப்பும், சுனிதா அனுப்பிய வங்கிக் கணக்கிற்கு 40 லட்சம் ரூபாயை அனுப்பியுள்ளார். பணம் அனுப்பிய ஓரிரு நாட்கள் கழித்துதான் மும்பை சுனிதா, எலிசபெத், அவரது நிறுவன நபர்கள் என அனைத்தும் போலி எனத் தெரியவந்தது.
ஜோசப்பின் செல்போன் அழைப்புகள், வாட்ஸ் ஆப் உரையாடல்களை வைத்து ஆய்வு செய்தபோது வெளிநாட்டில் இருந்து பேசியது போன்று ஒரு கும்பல் மோசடி செய்தது தெரியவந்தது.
அதன் அடிப்படையில், மும்பை அந்தேரியில், ஃபுல்ஜன் குவாடியோ கிரிஸ்டோபர் வில்மர் என்ற நைஜீரிய நாட்டைச் சேர்ந்த இளைஞரை சென்னை மத்திய குற்றப்பப் பிரிவு போலீசார் கைது செய்தனர். இவர் கோவா, செகந்திராபாத் போலீசாரால் ஏற்கனவே இதுபோன்ற புகார்களில் கைது செய்யப்பட்டவர்.
இந்த நைஜீரிய நபரும் இவரது கும்பலும், மும்பையில் இருந்தபடி ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் தொழிலதிபர்களைக் குறிவைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சியில் கோமாவில் இருந்த மகனை தந்தையே கொலை செய்த கொடூரம்.. ஏன்
மருத்துவ பொருட்கள், வீட்டுக்கு தேவையான ஆடம்பர பொருட்கள், கால்நடைகளுக்கான பொருட்கள், குதிரைகளை ஷைனிங் செய்யும் பொருட்கள் என வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்வது போலவும், இந்தியாவிலிருந்து வெளி நாட்டுக்கு ஏற்றுமதி செய்வது போலவும் இந்திய தொழிலதிபர்களிடம் கோடிக்கணக்கில் பணம் பறித்துள்ளனர்.
இந்த கும்பல் கமாடிட்டி ஸ்கேம் என்ற பெயரில் இந்தியா முழுவதும் 20 மோசடிகளை அரங்கேற்றியுள்ளது என்றும், சென்னையில் மட்டும் 4 புகார்கள் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
பிடிபட்ட நைஜீரியனோடு சேர்ந்து உடந்தையாக செயல்பட்ட மற்றவர்களையும் பிடிப்பதற்கு போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்