சாதிவாரியான புள்ளி விவரங்களைச் சேகரிக்க ஓய்வுபெற்ற நீதியரசர் குலசேகரன் தலைமையில் ஆணையம் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சாதிவாரியான புள்ளி விவரங்களைச் சேகரிக்க ஓய்வு பெற்ற நீதியரசர் குலசேகரன் தலைமையில் ஆணையம் அமைத்து முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

  • Share this:
    தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளும் சமுதாய அமைப்புகளும் சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என பல்வேறு காலக்கட்டங்களில் வைத்துவரும் கோரிக்கைகளின் அடிப்படையிலும், அரசின் பல்வேறு நலத்திட்ட பயன் அனைத்துப் பிரிவினருக்கும் சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டியும், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீடு சம்பந்தமான வழக்குகளை எதிர்கொள்ளத் தேவையான புள்ளி விவரங்களைப் பெறுவதற்காகவும், 'தற்போதைய நிலவரப்படியான சாதி வாரியான புள்ளி விவரங்களைச் சேகரிக்கும் வழிமுறைகளை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் உரிய தரவுகளைச் சேகரித்து, அறிக்கை சமர்ப்பிக்க அதற்கென பிரத்யேக ஆணையம் ஒன்று அமைக்கப்படும்' என கடந்த 1.12.2020 அன்று மாண்புமிகு அம்மாவின் அரசால் உத்தரவிடப்பட்டது.

    இந்த உத்தரவைத் தொடர்ந்து 'தற்போதைய நிலவரப்படி சாதிவாரியான அளவிடக்கூடிய முழுமையான புள்ளி விவரங்களை (Quantifiable data) சேகரிக்கும் வழிமுறைகளை முடிவு செய்து, அப்புள்ளி விபரங்களைத் திரட்டி அரசுக்கு அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் ஹ.குலசேகரன் அவர்களின் தலைமையில் ஆணையம் அமைக்கப்படும்' என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆணையம் உடனடியாக செயல்பாட்டுக்கு வருவதோடு விரைவில் அதன் பணியையும் துவக்கும்.

    ’சமூக நீதி காத்த வீராங்கனை’ மாண்புமிகு அம்மா அவர்கள் வழியில் செயல்படும், இவ்வரசு சமூக நீதியை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Rizwan
    First published: