• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மதுரையில் கல்லூரி மாணவியை அவமானப்படுத்திய பேராசிரியர்... மனமுடைந்த மாணவி தற்கொலை...

மதுரையில் கல்லூரி மாணவியை அவமானப்படுத்திய பேராசிரியர்... மனமுடைந்த மாணவி தற்கொலை...

தற்கொலை செய்துக்கொண்ட மாணவி

தற்கொலை செய்துக்கொண்ட மாணவி

மதுரையில், கல்லூரி வகுப்பறையில் உடன் பயின்ற மாணவர்களுக்கு பாடம் நடத்திய மாணவியை கல்லூரி பேராசிரியர் சக மாணவர்கள் முன்னிலையில் திட்டியதால் மனமுடைந்த மாணவி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். பள்ளியிலும் கல்லுாரியிலும் முதல் மாணவியாகத் திகழ்ந்து, தங்கப் பதக்கம் வாங்கியவர்  பத்மப்ரியா என்பது குறிப்பிடத்தக்கது. 

  • Share this:
    மதுரை மாவட்டம் திருமங்கலம் ராஜாஜி தெருவைச் சேர்ந்த செல்வக்குமார் - ஜோதி தம்பதியினரின் 2வது மகள் 21 வயதான பத்மப்ரியா. இவர் மதுரைக் கல்லுாரியில் பிஎஸ்சி கணிதம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற பத்மப்ரியா, கல்லுாரிப் படிப்பிலும் முதல் மாணவியாகத் திகழ்ந்து தங்கப் பதக்கமும் பெற்றுள்ளார்.

    கொரோனா ஊரடங்கிற்கு பின்பு மதுரைக் கல்லுாரி திறக்கப்பட்ட நிலையில் கடந்த 2ம் தேதி அன்று பத்மப்ரியா கல்லுாரிக்கு சென்றுள்ளார். வகுப்பறையில் சக மாணவர்களுக்கு பாடம் தொடர்பான சந்தேகங்களை அவர் விளக்கிக் கூறியுள்ளார்.

    அப்போது அங்கு வந்த துறைத் தலைவர் பேராசிரியர் முத்துக்குமார் ஆத்திரமடைந்து நீ என்ன ஆசிரியரா? பாடம் நடத்தும் அளவுக்குப் பெரிய ஆள் ஆகி விட்டாயா என சக மாணவ, மாணவியர் முன்பு அவதுாறு செய்யும் வகையில் திட்டி, வகுப்பறையின் வெளியில் நிறுத்தியதாக கூறப்படுகிறது.

    அவமானம் தாங்க முடியாத பத்மப்ரியா கண்ணீர் விட்டு அழவே, சக மாணவர்கள் அவரைத் தேற்ற முயன்றபோது அவர்களையும் பேராசிரியர் திட்டி அமர வைத்துள்ளார். அன்று மாலை வீட்டிற்கு வந்தவர் யாரிடமும் எதுவும் சொல்லாமல் விஷமருந்தி மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

    பெற்றோர் அதிர்ச்சியடைந்து அவரை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், வியாழன் மாலை உயிரிழந்தார். இதற்கிடையே நடந்த சம்பவம் தொடர்பாக, கல்லூரி பேராசிரியரிடம் பெற்றோர் விளக்கம் கேட்ட போது அவர்களையும் அவர் திட்டி அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

    கல்லூரி நிர்வாகமும் இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், பேராசிரியரைக் கைது செய்து பணி நீக்கம் செய்தால் மட்டுமே மாணவியின் உடலைப் பெற்றுக் கொள்வோம் என பெற்றோரும் உறவினர்களும் கூறியுள்ளனர். நடந்த சம்பவம் குறித்து விளக்கம் கேட்க பேராசிரியரையும், சம்பந்தப்பட்ட கல்லுாரியின் முதல்வரையும் நமது செய்தியாளர் தொடர்பு கொண்டபோது அவர்களின் செல்போன்கள் அனைத்து வைக்கப்பட்டிருந்தன.

    மேலும் படிக்க...நெருங்கும் தேர்தல்.. தயாராகும் தமிழகம்... எந்தக் கட்சி எந்தப் பக்கம்?

    இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள திருமங்கலம் போலீசார், இதுகுறித்து விசாரித்து வருகின்றனர். படிப்பில் சுட்டியான பத்மப்ரியா, பேராசிரியர் அவமானப்படுத்தியதால் தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் திருமங்கலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.







    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்




    மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104

    சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: