• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • 'செமஸ்டர் தேர்வை ஆன்லைனில் நடத்துங்க...' : கல்லூரி மாணவர்களுக்காக களம் இறங்கிய விஜயகாந்த்

'செமஸ்டர் தேர்வை ஆன்லைனில் நடத்துங்க...' : கல்லூரி மாணவர்களுக்காக களம் இறங்கிய விஜயகாந்த்

தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாகவே நடத்தப்படும் என்று தமிழக அரசு பிடிவாதமாக இருப்பது மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது : விஜயகாந்த்

  • Share this:
    கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த வேண்டும் என்றும், நேரடித் தேர்வாக நடத்தக் கூடாது எனவும் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

    தமிழகத்தில் கல்லூரி படிப்புகளுக்கான செமஸடர் தேர்வுகள் நேரடியாக நடத்தப்படும் என்று உயர் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், ஆன்லைனில் தேர்வை நடத்த வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-

    கொரோனா நோய் தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. பின்னர் மாணவர்களின் நலன் கருதி ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், தற்போது பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

    கடந்த செப்டம்பர் மாதம் முதல் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நடந்து வந்தாலும் பண்டிகைகள், பருவமழை என அடிக்கடி விடுமுறை விடப்படுவதால், கல்லூரிகளில் நடப்பு தேர்வுக்கான பாடங்களை முழுமையாக முடிக்கப்படவில்லை என மாணவர்கள் கூறுகின்றனர். மேலும் ஆன்லைனில் வகுப்புகள் சரியாக நடைபெறவில்லை. ஆன்லைன் வகுப்புகளை எங்களால் சரிவர கவனிக்க முடியவில்லை என மாணவர்களே தெரிவித்துள்ளனர்.

    இதுபோன்ற சூழலில் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாகவே நடத்தப்படும் என்று தமிழக அரசு பிடிவாதமாக இருப்பது மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன் வகுப்புகளில் பாடங்களை முழுமையாக உள்வாங்க முடியாத நிலையில், நேரடி தேர்வுகள் நடத்தப்பட்டால், தேர்வில் தோல்வி அடைந்து விடுமோ என்ற அச்சம் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும் நேரடி தேர்வுகள் நடத்த தமிழக அரசு இரண்டு மாதம் காலஅவகாசம் வழங்கினாலும், அதற்குள் மாணவர்கள் தயாராவார்களா என்பதும் கேள்விகுறியே!

    எனவே மாணவர்களின் நலன் கருதி, நடப்பு செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் முறையிலேயே நடத்த வேண்டும். ஆன்லைனில் நடத்தக் கோரி போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளையும் தமிழக அரசு உடனே திரும்ப பெற வேண்டும்.
    இவ்வாறு விஜயகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Musthak
    First published: