டிபன் ரூ.5, மருத்துவம் ரூ.30.... கோவை சமூக ஆர்வலர் சுப்ரமணியம் காலமானார்

டிபன் ரூ.5, மருத்துவம் ரூ.30.... கோவை சமூக ஆர்வலர் சுப்ரமணியம் காலமானார்

சுப்பிரமணியம்

உணவகம், மருத்துவமனை, மருந்தகம் போன்றவற்றை நடத்தி லாப நோக்கமின்றி, சேவை மனப்பான்மையுடன் நடத்தி வந்தார்

  • News18
  • Last Updated :
  • Share this:
கோவை மக்களுக்கு தரமான உணவும், மருத்துவமும் கிடைக்க வேண்டும் என்பதற்காக சேவை மனப்பான்மையுடன் உணவகம், மருத்துவமனை, மருந்தகம் போன்றவை நடத்தி வந்த சமூக ஆர்வலரும், தொழிலதிபருமான சுப்பிரமணியம் இன்று உயிரிழந்தார்.

கோவை சேர்ந்த சாந்தி சோசியல் சர்வீஸ் அமைப்பின் அறங்காவலர் சுப்பிரமணியம். இவர் கோவையில் சாந்தி கியர்ஸ் என்ற நிறுவனத்தை 1972 துவங்கி, இயந்திர உதிரி பாகங்களை பலவேறு நாடுகளுக்கு தயாரித்து கொடுத்து மிக வேகமாக வளர்ச்சியடைந்தார்.

பின்னர் 1996 ம் ஆண்டு சாந்தி சோசியல் சர்வீஸ் என்ற அமைப்பினையும் துவங்கிய சுப்பிரமணியம், அதன் அறங்காவலராகவும் இருந்து வந்தார். சமீபத்தில் தனது சாந்தி கியர்ஸ் நிறுவனத்தை வேறு நிறுவனத்திற்கு விற்ற சுப்பிரமணியம் , முழு நேரமாக சாந்தி சோசியல் சர்வீஸ் பணிகளை மட்டும் கவனித்து வந்தார்.

அனைத்து மக்களுக்கும் தரமான உணவும், மருத்துவமும் சென்று சேர வேண்டும் என்பதற்காக, உணவகம், மருத்துவமனை, மருந்தகம் போன்றவற்றை நடத்தி லாப நோக்கமின்றி, சேவை மனப்பான்மையுடன் நடத்தி வந்தார். மலிவு விலையில் தரமான உணவு வழங்கப்படுவதால் தினமும் ஏராளமான பொதுமக்களும், தொழிலாளர்களும், இளைஞர்களும் இந்த உணவகத்தை பயன்படுத்தி வந்தனர்.

மேலும் தினமும் 60 வயதுக்கு மேற்பட்ட 300 பேருக்கு இலவச உணவும் இங்கு வழங்கப்பட்டு வந்தது. மேலும் மருத்துவமனையில் மருத்துவர் கட்டணம் 30 ரூபாய், மருத்தகங்களில் 30 சதவீதம் விலை குறைவில் அனைத்து மருந்துகளும் விற்கப்பட்டு வருகின்றன. மருத்துவ பரிசோதனை நிலையத்திலும் குறைவான கட்டணமே வசூல் செய்யப்பட்டது.

இதனால் மருத்துவ ஆலோசனை பெறவும் , பரிசோதனைகள் செய்யவும்,மருந்துகள் வாங்கவும் பொது மக்கள் ஆர்வம் காட்டுவார்கள். இது தவிர சாந்தி சோசியல் சர்வீஸ் சார்பில் நடத்தப்படும் பெட்ரோல் பங்கில் , டீசல், பெட்ரோல் போன்றவை ஸ்டாக் வரும் போது என்ன விலையோ, அதே விலை அந்த ஸ்டாக் முடியும் வரை விற்பனை செய்யப்படும் என்பதால் வாகன ஓட்டிகளும் இந்த பெட்ரோல் பங்கினை நாடிசெல்வது வழக்கம். இது தவிர,சாந்தி சோசியல் சர்வீஸ் அமைப்பால் இலவச மின்மயானமும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

Also read... சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசின் சார்பில் உணவு வழங்கியதில் முறைகேடு- திமுக எம்.எல்.ஏ., மா.சுப்ரமணியன் குற்றச்சாட்டு!

தனது சாந்தி சோசியல் சர்வீஸ் அமைப்பு மூலம் செய்த மக்கள் பணிகளால் கோவை மக்களின் பெரும் அன்பை சம்பாதித்தவர் சுப்பிரமணியம். இவர் தனது சேவைகள் குறித்து ஊடகங்களிடம் இது வரை பேசியதில்லை. ஊடகங்களில் முகத்தை காட்டுவதில்லை என்பதில் இறுதி வரை உறுதியாக இருந்தவர் சுப்பிரமணியம்.

78 வயதான சுப்பிரமணியம் உடல் நலக்குறைவால் கடந்த சில தினங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை சுப்பிரமணியம் உயிரிழந்தார். கோவை மக்களுக்கு சுப்பிரமணியத்தின் முகம் பெரும்பாலும் தெரியாது என்றாலும் ,சாந்தி சோசியல் சர்வீஸ் நிறுவனத்தின் முலம் அவர் செய்த சேவைகள் கோவை மக்களின் மனதில் வேரூன்றி இருக்கின்றது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vinothini Aandisamy
First published: