கோவையில் யூடியூபர் வெளியிட்ட புது வீட்டை பார்த்து அசந்து போன கொள்ளையன் புதுச்சேரியில் இருந்து திருட வந்து யூடியூப்பர் கையில் சிக்கி கொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
கோவை மாவட்டம் கே.ஜி. சாவடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிச்சனூர் பகுதியில் சுஹைல் (29) மற்றும் பாபினா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் "சுஹைல் வ்லாகர்" மற்றும் சைபர் தமிழா என்ற யூடியூப் சேனல்களை நடத்தி வருகின்றனர். இந்த சேனலில் வீட்டில் நடப்பவை, சிறுவர்கள் விளையாடுபவை உள்ளிட்ட வீடியோக்களை வெளியிடுவார்கள். இந்த நிலையில் சுஹைல் தான் கட்டி குடியேறிய புது வீடு குறித்தும் தனது ஆடம்பரம் குறித்தும் யூடிப்பில் வீடியோ ஒன்றை சமீபத்தில் வெளியிட்டார். இந்த வீட்டில் உள்ள வசதிகள் குறித்தும் ஆடம்பரங்கள் குறித்தும் அதில் பேசினார்.
இதை ரசித்த கொள்ளையன் ஒருவன் அவரின் வீட்டில் கொள்ளை அடிக்க திட்டமிட்டான். இதற்காகவே ஸ்கெட்ச் போட்டு புதுச்சேரியில் இருந்து கோவை நோக்கி வந்துள்ளான். ஒரு வழியாக யூடியூப்பில் பார்த்த வீட்டை நேரடியாக கண்ட சந்தோஷத்தில், கடந்த 20ம் தேதி இரவு வீட்டு காம்பவுண்டுக்குள் புகுந்த அந்த கொள்ளையன் பின் வழியாக மொட்டை மாடிக்கு சென்று உள்ளார்.
பின்னர் சில மணி நேரங்கள் மொட்டை மாடியில் உறங்கிய கொள்ளையன் 21 ஆம் தேதி காலை 6.35 மணியளவில் பின் வழியாக இருந்து வீட்டுக்குள் செல்வதற்காக நின்று கொண்டிருந்தார்.
அப்போது வீட்டு உரிமையாளரான யூடியூபர் சுஹைலின் நண்பர் ஹரி வீட்டு வளாகத்திற்குள் வந்துள்ளார். அப்போது, சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த நபரை நீங்கள் யார் என கேட்டார். அப்போது கையில் கத்தியுடன் வந்த அந்த மர்ம நபர் ஹரியை மடக்கியபடி ஆயுதமுனையில் வீட்டிற்குள் வற்புறுத்தி அழைத்துச் சென்றார்.
தொடர்ந்து கொள்ளையன் சுஹைலின் வீட்டின் கதவை தட்டிய போது சுஹைல் கதவை திறந்தார். அப்போது முகக்கவசம் அணிந்திருந்த அந்த நபர் திடீரென ஹரியை விட்டுவிட்டு சுஹைலை மடக்கி பிடிக்க முயற்சி செய்தார். மேலும் யூடியூபரின் செல்போனையும் பிடுங்க முயற்சி செய்தார். அப்போது மூன்று பேருக்குள்ளும் கடுமையாக தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து தள்ளுமுள்ளு நடந்த வேலையில் ஹரி என்பவர் கொள்ளையனிடமிருந்த கத்தியை பிடுங்கினார். பின்னர் சுஹைல் தனது மனைவியை வெளியில் வர வேண்டாம் என்றும் காவல்துறைக்கு அழைக்க வேண்டும் எனவும் சத்தமிட்டார்.
தொடர்ந்து ஹரியும் யூடியூபரும் இணைந்து கொள்ளையனை கட்டி வைத்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். கொள்ளையன் புதுச்சேரியைச் சேர்ந்த அனுராமன் (25) என்பதும் சுஹைல் வெளியிட்டுள்ள வீடியோக்களுக்கு இவர் ரசிகர் என்பதும் , திடீரென மனம் மாறி புதுச்சேரியில் இருந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட வந்ததும் காவல் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
தொடர்ந்து அனுராமனை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை யூடிப்பர் சுஹைல் அவரது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
செய்தியாளர்: ஜெரால்ட், கோவை
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Crime News, Local News