கோவையில் திருமணமான 17 வயது சிறுமியை இரண்டாவதாக திருமணம் செய்த இளைஞர், அவருக்கு உடந்தையாக இருந்த டிரைவர் என இரண்டு பேரை போக்சோ சட்டத்தில் இராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்தனர்.
கோவை சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த சிறுமியை அவரது பெற்றோர் திண்டுக்கல்லில் வெல்டிங் தொழிலாளியாக பணியாற்றி வந்த உறவினர் ஒருவருக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் செய்து வைத்தனர். இதனைத் தொடர்ந்து சிறுமி தனது கணவரின் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்தநிலையில் சிறுமியின் உறவினர் ஒருவர் வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, அவருக்கு உதவியாக சிறுமி இருந்துள்ளார். அந்த மருத்துவமனையில் முத்தூர் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் சிவா என்பவர் விபத்து ஒன்றில் சிக்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
அப்போது சிறுமிக்கும் சிவாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் தங்களது செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டதாக தெரிகிறது. மருத்துவமனையை விட்டு வெளியே வந்த பின்னரும் , இருவரும் செல்போனில் பேசியும் நேரில் சந்தித்தும் வந்ததாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் சிறுமியின் கணவருக்குத் தெரிந்து அவர் சிறுமியை கண்டித்துள்ளார். இதனையடுத்து சிறுமி திண்டுக்கல்லில் இருந்து கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனது பெற்றோரின் வீட்டிற்கு வந்துவிட்டார். சிறுமி அங்கு பெற்றோருடன் வசித்து வந்த நிலையில் திடீரென கோவையில் இருந்து மாயமானார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த சரவணம்பட்டி காவல் துறையினர் தனிப்படை அமைத்து சிறுமியை தேடி வந்த நிலையில் சிறுமி திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அடுத்த மஞ்சூர் பகுதியில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற தனிப்படை காவல்துறையினர் சிறுமியை பத்திரமாக மீட்டனர்.
சிறுமியை கடத்திச் சென்ற லாரி ஓட்டுனர் சிவா, அவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதும், இரண்டாவது திருமணம் செய்து கொண்டபோது சிறுமிக்கு 17 வயது என்பதும் காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது.
Also read... தங்கக்கடத்தல் வழக்கில் அரசுக்கு தொடர்பில்லை - கேரள முதல்வர் பினராயி விஜயன் விளக்கம்..
இதனையடுத்து வழக்கு ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. சிறுமிக்கு 15 வயதில் திருமணம் செய்து வைத்த அவரது தாய் தந்தை மற்றும் கணவர், கணவரின் தாய் ஆகியோர் மீது குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் சிறுமியை முதலில் திருமணம் செய்த வெல்டிங் தொழிலாளி, சிறுமியை கொடைக்கானல் அழைத்து சென்று இரண்டாவது திருமணம் செய்த டிரைவர் சிவா ஆகிய இருவரையும் இராமநாதபுரம் மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.