தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டி கிறிஸ்தவ பள்ளி மாணவி தற்கொலை சம்பவம் தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட தனிப்படை போலீசார்
கோவையில் சிறுமியின் தாத்தா பாட்டியிடம் இன்று காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டி கிறிஸ்தவ பள்ளியில் பயின்றுவந்த அரியலூர் வடுகபாளையத்தை சேர்ந்த 12 ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி மதமாற்ற முயற்சி காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு காரணங்கள் இருக்கிறதா என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோவை சரவணம்பட்டியில் மாணவியின் பெரிய பாட்டி நித்யானந்த சரஸ்வதி இருப்பது குறித்து அறிந்த தனிப்படையினர் இன்று கோவை வந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். மாணவியின் தாத்தா, பாட்டி நித்யானந்த சரஸ்வதியை கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்துக்கு அழைத்த தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் டி.எஸ்.பி பிருந்தா தலைமையிலான தனிப்படை போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.சரவணம்பட்டி காவல் நிலையத்தில் தாத்தா பாட்டியிடம் நடத்தப்பட்ட விசாரணையை வீடியோ பதிவும் செய்து கொண்டனர்.
மாணவி பள்ளியில் துன்புறுத்தப்பட்டதை சைல்ட் லைன் ஹெல்ப்லைன் (1098) எண்ணிற்கு இரு வருடங்கள் முன்பு தாத்தா, பாட்டி நித்யானந்த சரஸ்வதி ஆகியோர் புகார் அளித்தது குறித்தும் விசாரணை நடத்தினர். மேலும் மாணவியின் சித்தி குறித்தும் அவரது நடவடிக்கைகள் குறித்தும் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் இயந்திரத்தால் தொடர்ந்து சச்சரவு.. அரசு புதிய உத்தரவு
சிறுமி விஷம் குடித்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, திருப்பூரில் வசிக்கும் சிறுமியின் தாய்மாமா பிரபாகரன் தங்களை அழைத்து பேசியதையும் போலீஸ் விசாரணையில் தாத்தா பாட்டி தெரிவித்தனர். இதனையடுத்து திருப்பூரில் உள்ள மாணவியின் தாய்மாமா பிரபாகரனிடம் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இன்று காலை பிரபாகரனிடம், டிஎஸ்பி பிருந்தா தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.