முயலின் உடலை நாய்களுக்கு போட்டு டிக்டாக் வீடியோ எடுத்த 3 இளைஞர்களுக்கு அபராதம்

முயலின் உடலை நாய்களுக்கு போட்டு டிக்டாக் வீடியோ எடுத்த 3 இளைஞர்களுக்கு அபராதம்
முயலின் உடலை நாய்களுக்கு போட்டு டிக்டாக் வீடியோ எடுத்த 3 இளைஞர்கள் கைது
  • Share this:
ஊரடங்கு தொடங்கியது முதல் வீட்டுக்குள் முடங்கியிருக்கும் இளைஞர்களின் முழுநேர பொழுதுபோக்காக மாறியுள்ளது டிக் டாக் செயலி. அதில் சினிமா பாடல், வசனங்களுக்கு டிக் டாக் செய்து வெளியிடும் வீடியோக்களுக்கு பெரிய வரவேற்பு இல்லாமல் போனது. இதனால் லைக்குக்காக வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என நினைக்கும் இளைஞர்கள் விலங்குகளை கொடுமைபடுத்த தொடங்கியுள்ளனர்.

மணப்பாறை

கடந்த மாதம் காட்டில் உள்ள வனவிலங்கான உடும்பை வேட்டையாடி, பிரியாணி செய்து சாப்பிட்டதை கெத்தாக டிக்டாக்கில் பதிவிட்ட இளைஞர்கள் கும்பலை மணப்பாறை போலீசார் கைது செய்தனர். உடும்பை பிடித்து கட்டிப்போட்டு விளையாண்ட இளைஞர்கள் கூட்டாக பிரியாணி சமைத்து மது அருந்தினர். ஆர்வக்கோளாறில் எடுத்த வீடியோக்களை டிக்டாக்கில் பதிவிட விளையாட்டு விபரீதத்தில் முடிந்துள்ளது.


ஈரோடு

மே ஒன்றாம் தேதி ஈரோடு மாவட்டத்தில் பச்சைக் கிளிகளைப் பிடித்து வந்து வீட்டில் வளர்த்து அவற்றைப் பேச வைத்து டிக்டாக்கில் வீடியோவாக வெளியிட்ட பள்ளி மாணவர், வனத்துறையிடம் சிக்கினார். தோட்டத்தில் இருந்த 2 பச்சைக் கிளிகளைப் பிடித்து வந்த பள்ளி மாணவர் அவற்றை டிக்டாக்கில் பதிவிட்டு சிக்கலுக்கு ஆளானார்.

தென்காசிமே 3வது வாரம் தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள வெள்ளாளங்குளம், பாண்டியாபுரம் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் உலகமுத்து, சுப்புராஜ், ஆரியங்காசாமி, சுரேஷ். இவர்கள் நான்கு பேரும் வேட்டை நாய்களை வைத்து அங்குள்ள வனப்பகுதியில் முயல் வேட்டையாடினர். தங்களது வேட்டை வீரர் செய்த சாகத்தை வீடியோவாகவும் எடுத்து டிக்டாக்கில் வெளியிட்டனர். இந்த வீடியோ அந்த வட்டாரத்தில் பரவி, வனத்துறையினர் பார்வைக்கு சென்று நால்வரும் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களுக்குத் தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது

வள்ளியூர்

கடந்த 22ஆம் தேதி நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பூனையைத் தூக்கில் தொங்க விட்டுக் கொலை செய்து அதை டிக்டாக்கிலும் வீடியோவாக வெளியிட்ட இளைஞர் தங்கராஜ் கைது செய்யப்பட்டார்.

இப்படி தொடர்ச்சியாக விலங்குகளைக் கொண்டு டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டு பலர் சிக்கிய நிலையில் கோவையிலும் ஒருவர் சிக்கி உள்ளார்.

கோவை

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு மெட்டுவாவி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வளர்ப்பு நாய்களுக்கு காட்டு முயலை உணவாகக் கொடுக்கும் டிக் டாக் வீடியோ கடந்த இரு நாட்களுக்கு முன்பு வெளியானது.

இந்த வீடியோ அப்பகுதி மக்களிடையே பரவி வந்த நிலையில், இதுகுறித்து மதுக்கரை வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் டிக் டாக் வீடியோவில் உள்ள நபர் கிணத்துக்கடவு அடுத்த மெட்டுவாவி பகுதியை சேர்ந்த கார்த்தி என தெரிய வந்தது.  இதனையடுத்து அவரின் முகவரியை கண்டறிந்த வனத்துறையினர் அவரை பிடித்தனர்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், வாகனத்தில் அடிபட்டு சாலையில் இறந்து கிடந்த காட்டு முயலை எடுத்து தனது நாய்களுக்கு உணவாக கொடுப்பதை வீடியோ பதிவு செய்து டிக் டாக்கில் பதிவேற்றம் செய்ததாக கூறினார்.

மேலும் டிக் டாக் வீடியோ எடுக்க அவரது நண்பர்கள் குமார், தமிழ்வாணன் ஆகியோரும் உதவியதை அறிந்த வனத்துறையினர் அவர்களையும் பிடித்தனர்.

மூன்று பேரையும் மதுக்கரை வனச்சரகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்ட வனத்துறையினர், மூன்று பேருக்கும் தலா 7 ஆயிரம் ரூபாய் வீதம் 21 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

மூவரும் அபராத தொகை உடனடியாக செலுத்திய நிலையில் எச்சரிக்கைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

Also see...

உங்கள் ஒத்துழைப்பு இல்லையென்றால் நோயைத் தடுக்கமுடியாது - முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள்

சென்னையில் குறைந்தது ஆட்டு இறைச்சி விலை: கோழிக்கறி விலை ஏற்றம்

 








First published: May 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading