Home /News /tamil-nadu /

கோவையில் 3 வயது குழந்தைக்கு சாதி, மதமற்றவர் என்று சான்றிதழ் வாங்கிய பெற்றோர்

கோவையில் 3 வயது குழந்தைக்கு சாதி, மதமற்றவர் என்று சான்றிதழ் வாங்கிய பெற்றோர்

சாதியற்றவர் சான்றிதழ் பெற்றவர்

சாதியற்றவர் சான்றிதழ் பெற்றவர்

கோவையைச் சேர்ந்த பெற்றோர் அவர்களது குழந்தைக்கு சாதி, மதமற்றவர் என்ற சான்றிதழ் வாங்கியுள்ளனர்.

    கோவையைச் சேர்ந்த பெற்றோர் தனது குழந்தையைப் பள்ளியில் சேர்ப்பதற்கு வழக்கமாக வாங்கும் சாதிச்சான்றிதழ் வாங்காமல் சாதி, மதம் வேண்டாம் என சான்றிதழ் வாங்கியுள்ள நிகழ்வு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

    நமது இந்திய நாடு சாதி மதக் கட்டமைப்பால் பின்னி பிணைந்துள்ள நாடு. இங்கு சாதி, மத அடையாளங்கள், ஏற்றத்தாழ்வுகள் நீண்டகாலமாக இருந்து வருகின்றன. குழந்தைகள் பிறப்பது முதல் வயது முதிர்ந்து மயானம் செல்லும் வரை சாதி முக்கிய மையமாக அங்கம் வகித்து வருகிறது. இப்படி இந்திய சமூகத்தில் அங்கம் வகித்துள்ள சாதியால் மனித நேயம் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இப்படிப்பட்ட சாதி, மத பார்வை ஏற்றத்தாழ்வுகள் இந்திய நாட்டிற்கு சாபமாய் இருந்துவரும் நிலையில் கோவையைச் சேர்ந்த பெற்றோர் தனது மகளுக்கு சாதியும் வேண்டாம், மதமும் வேண்டாம் எனச் சான்றிதழ் பெற்றுள்ளனர்.

    ஏற்கனவே கடந்த சில வருடங்களுக்கு முன் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் சினேகா, இந்தியாவிலேயே முதன்முறையாக ‘சாதி மற்றும் மதம் அற்றவர்’ என அரசு சான்றிதழ் பெற்றுள்ள நிலையில் தற்போது கோவையைச் சேர்ந்தவர்கள் சாதி மதம் அற்றவர் என்ற சான்றிதழ் பெற்றுள்ளனர்.

    கோவை சாய்பாபா காலனி பகுதியைச் சேர்ந்தவர்கள் நரேஷ் கார்த்திக், காயத்ரி தம்பதியினர். நரேஷ் கார்த்திக் சரவணம்பட்டி பகுதியில் கிராபிக் டிசைனராக பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு வில்மா என்ற மூன்று வயது பெண் குழந்தை உள்ளார். சாதி, மத பிரிவினைகளை விரும்பாத நரேஷ் கார்த்திக் இத்தனை ஆண்டுகள் நாட்டில் சாதி, மதம் இருந்த சூழலில் வருங்கால தலைமுறையாவது சாதி, மதம் அற்றவர்களாக இருக்க வேண்டுமென செயல்பட்டு வருகிறார்.

    இந்தச் சூழலில் தனது பெண் குழந்தைக்கு சாதியும் வேண்டாம், மதம் வேண்டாம், மனிதம் மட்டும் போதும் என்ற அடிப்படையில் பள்ளியில் சேர்ப்பதற்கு தனது மகள் வில்மா எந்த சாதி பிரிவையும் சாராதவர், எந்த மத பிரிவையும் சாராதவர் என கோயம்புத்தூர் வடக்கு வட்டாட்சியரிடம் சான்று பெற்றுள்ளார்.

    இந்த நிலையில் சிறுமியை பள்ளியில் சேர்க்க சாதி சான்றிதழ் இல்லாமல் சாதி மதப் பிரிவை சாராதவர் என சான்றிதழ் பெற்ற சிறுமியின் தந்தை நரேஷ் கார்த்திக் கூறும்போது, ‘சாதி இல்லாத சமுதாயம் படைக்க வேண்டும். அதற்கு ஒரு சான்றிதழ் வேண்டும். அதனால் சாதி இல்லை என ஒரு சான்றிதழ் வாங்கும் முயற்சியில் இந்த சான்றிதழ் வாங்கியுள்ளேன். பள்ளியில் சேர்க்கும் பொழுது சாதி, மதம் என்ற பகுதி உள்ளது.

    ஆனால் சாதி இல்லை என்பதற்கான பகுதி இல்லை. சாதி விருப்பமில்லை என்று பதிவு செய்வதற்கு அரசாணை இருந்தாலும், செயல்பாட்டில் இல்லை. அரசாணை தொடர்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்தாலும் முறைப்படுத்துதல் இல்லை. அப்போதுதான் இரண்டு ஆண்டுக்கு முன்பு வழக்கறிஞர் சினேகா என்பவர் சாதி, மதம் இல்லை என்ற சான்றிதழ் வாங்கியுள்ளார். இதைத் தொடர்ந்து அவரை மேற்கோள்காட்டி நானும் இந்த சான்றிதழை எனது மகளுக்கு பெற்றுள்ளேன்.

    கோவை மாவட்ட ஆட்சியர் இதில் உதவி செய்தார். மதம் என்பது வாழ்க்கை முறை மட்டுமே. மதங்கள் பெண்களுக்கு எதிரானது மட்டுமே. மதத்தில் இருந்து சாதி கட்டமைக்கப்படுகிறது. உயர்வு தாழ்வும் சாதியில் உள்ளது. பிறப்பால் ஏற்படும் இந்த உயர்வு, தாழ்வு ஏற்றுக்கொள்ள முடியாது. பலர் இதை ஒழிக்க போராடியுள்ளனர்.

    இந்த சான்றிதழ்  சாதி ஒழிப்புக்கான முதல்படியாக பார்க்கிறேன். பள்ளிக்கு செல்லும் பொழுதே சாதி இல்லாமல் அனுப்புகிறேன். எனது மகள் தலைமுறையாவது சாதி உள்ளது என்பதை அறியாமல் போகட்டும். சாதி இல்லாத சமூகத்தை உருவாக்க இந்த சான்றிதழ் பேருதவியாக இருக்கும்’ என்று தெரிவித்தார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Coimbatore

    அடுத்த செய்தி