ரூ.1 கோடிக்கு ஆசைப்பட்டு மூதாட்டி கொலை.. பெண் உட்பட ஒரு 5 பேர் சிக்கியது எப்படி?

கோவையில், 62 வயது மூதாட்டி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஒரே தெருவைச் சேர்ந்த பெண் உட்பட 5 பேர் சிக்கியுள்ளனர். ஒரு கோடி ரூபாய் பணத்திற்கு ஆசைப்பட்டு, மைசூர்பாவில் மயக்கமருந்து கலந்து கொடுத்தும், கத்தியால் குத்தியும் கொலை செய்த அக்கா, தங்கை, தம்பி சிக்கியது எப்படி?

  • Share this:
கோவை கெம்பட்டி காலணியைச் சேர்ந்தவர் 62 வயதான தனலட்சுமி. 2 மகன்கள், ஒரு மகள் ஆகியோர் இவரது குழந்தைகள். மகள் வெளிநாட்டில் வசித்து வருகிறார். ஒரு மகன் இறந்து விட்டார். திருமணம் ஆகாத ஒரு மகனுடன் தாய் தனலட்சுமி தனியாக வசித்து வந்தார். செப்டம்பர் 30-ஆம் தேதி இரவில், வேலைக்கு சென்ற மகன் வீடு திரும்பிய நிலையில், ரத்த வெள்ளத்தில் கழுத்தில் கத்தி குத்தப்பட்ட நிலையில் தாய் தனலட்சுமி சடலமாகக் கிடந்தார். அவர் அணிந்திருந்த 10 சவரன் நகைகள், வீட்டில் இருந்த 85 சவரன் நகைகள், மூன்றரை லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

பெரியகடை வீதி போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்த நிலையில், கடந்த 10 நாட்களாக பெரிய அளவில் துப்பு கிடைக்கவில்லை. பிரபல கொள்ளைக் குற்றவாளிகள் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்த போலீசாருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதையடுத்து தனலட்சுமியுடன் நெருக்கமாக இருப்பவர்கள் யார் என விசாரித்து அவர்களின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தனர்.

அதில் தனலட்சுமி வசித்த அதே தெருவைச் சேர்ந்த லதா என்பவரின் செல்போனில் இருந்து சம்பவம் நடப்பதற்கு முதல்நாள், ஒரு எண்ணுக்கு 30 முறை அழைப்புகள் சென்றது தெரியவந்தது. அந்த எண்ணை ஆய்வு செய்தபோது அது லதாவின் தம்பி திலக் எண் என்பது தெரியவந்தது. லதாவைப் பிடித்து போலீசார் கிடுக்கிப் பிடி போட்டு விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.


தனலட்சுமியுடன் லதாவுக்கு நெருங்கிய நட்பு இருந்துள்ளது. அடிக்கடி தனலட்சுமியின் வீட்டிற்கு லதா வந்து செல்வார். அப்படி ஒருநாள் லதா வந்தபோது, ஒரு கோடி ரூபாய் மதிப்பில் கட்டிடம் ஒன்றை விலைக்கு வாங்குவது குறித்து தனலட்சுமி செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அதைக் கேட்ட லதா, தனலட்சுமி வீட்டில் ஒரு கோடி ரூபாய் இருப்பதாக நினைத்து அதைக் கொள்ளையடிக்க முடிவு செய்துள்ளார். தனது தம்பி திலக் மற்றும் தங்கை மாலாவிடம் கொள்ளைத் திட்டம் குறித்து கூறியுள்ளார்.

பீளமேட்டில் ஒர்க் ஷாப் நடத்தும் சத்தியசீலன், அவரது நண்பர் செல்வம், ஆட்டோ ஓட்டுநர் மனோஜ் ஆகியோருடன் திலக் இதுகுறித்து சதியாலோசனை நடத்தியுள்ளார். திட்டப்படி சம்பவத்தன்று பிற்பகலில், ஒரு இருசக்கர வாகனத்தை ஆட்டோவில் வைத்து பழுது பார்க்க எடுத்துச் செல்வதைப் போல சென்றுள்ளனர்.

மனோஜை ஆட்டோவில் இருக்க வைத்து விட்டு தனலட்சுமி வீட்டிற்குள் சென்றுள்ளனர். திலக்கை தனலட்சுமி ஏற்கனவே அறிந்தவர் என்பதால், வீட்டிற்குள் அனுமதித்துள்ளார். அப்போது மயக்க மருந்து தடவிய மைசூர்பாவை தனலட்சுமியிடம் கொடுத்து சாப்பிடச் சொல்லியுள்ளார் திலக்.தனலட்சுமி சாப்பிட்டதும் வித்தியாசமான சுவை இருந்ததால் உடனே எச்சரிக்கை அடைந்து கத்தத் தொடங்கியுள்ளார். பதற்றமடைந்த திலக், உடனே அவரது கழுத்தில் கத்தியால் குத்தி ரத்த வெள்ளத்தில் கீழே சாய்த்துள்ளார். கீழே விழுந்த தனலட்சுமி துடிதுடித்து உயிரிழந்தார். திலக்கும், செல்வமும் வீட்டில் ஒரு கோடி ரூபாய் பணத்தை தேடியுள்ளனர்; ஆனால் அவர்கள் எதிர்பார்த்தபடி பணம் சிக்கவில்லை.

இதனையடுத்து வீட்டில் இருந்த மூன்றரை லட்சம் ரூபாய் ரொக்கம், தனலட்சுமி அணிந்திருந்த 10 சவரன் நகைகள் , வீட்டில் இருந்த 85 சவரன் நகைகள் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு ஆட்டோவில் தப்பி சென்றது விசாரணையில் தெரியவந்தது. தனலட்சுமி வீட்டிற்கு போலீசார் மற்றும் உறவினர்கள் வந்த நிலையில் லதாவும் கூடவே இருந்து கண்ணீர் வடித்து கதறுவது போல நடித்துள்ளார் என்கின்றனர் போலீசார்.

மேலும் படிக்க... மருத்துவப் படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு - ஆளுநரின் செயலாளர் உடனடியாக விளக்கம் தர ஆணை

இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட லதா, அவரது தங்கை மாலா, சத்தியசீலன், செல்வம், மனோஜ் ஆகிய 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். திலக் சென்னையில் தலைமறைவாக இருக்கும் தகவல் அறிந்த தனிப்படை போலீசார் அவரை கைது செய்ய விரைந்துள்ளனர்.கைது செய்யப்பட்ட 5 பேரிடம் இருந்து 70 சவரன் நகைகள், ஆட்டோ, கார், இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஒரு கோடி ரூபாய் பணத்திற்காக நட்பாகப் பழகிய பெண்மணியே ஆட்களை ஏவி மூதாட்டியைக் கொலை செய்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
First published: October 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading