Home /News /tamil-nadu /

திமுக வெற்றியில் கொங்கு மண்டலத்தில் முதலிடத்தை பிடித்த கோவை

திமுக வெற்றியில் கொங்கு மண்டலத்தில் முதலிடத்தை பிடித்த கோவை

திமுக

திமுக

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கொங்கு மண்டலத்தில் திமுக மிகப்பெரிய வெற்றிப் பெற்றிருக்கும் நிலையில், அதில் அதிக இடங்களை வென்று கோவை முதல் இடத்தில் உள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை பிடித்த நிலையிலும் கொங்கு மண்டலத்தில் அதிமுக அதிக சட்டமன்ற தொகுதிகளை கைப்பற்றியது. ஆயினும் கொங்கு மண்டலத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில், திருப்பூர் ( தெற்கு), காங்கேயம், தாராபுரம் உள்ளிட்ட மூன்று சட்டமன்ற தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. அதே போன்று ஈரோடு மாவட்டத்தில் சட்டமன்ற 8 தொகுதிகளில் ஈரோடு ( கிழக்கு), ஈரோடு ( மேற்கு), அந்தியூர் உள்ளிட்ட மூன்று சட்டமன்ற தொகுதியை திமுக கூட்டணி கைப்பற்றியது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் 4 தொகுதியை திமுக கைப்பற்றியது. கரூர் மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் முழுமையாக திமுக கூட்டணி வென்றது.  எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தில் கூட 11 தொகுதிகளில், சேலம் ( வடக்கு) என்ற ஒரு தொகுதியையாவது திமுக வென்றது. ஆனால் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட திமுகவால் வெற்றி பெற முடியவில்லை.

இதனையடுத்து கொங்கு மண்டலத்தில் திமுகவை பலப்படுத்த அதன் தலைமை முடிவு செய்து, கரூர் மாவட்டத்தில் முழுமையாக திமுகவிற்கு வெற்றியைப் பெற்றுத் தந்த அமைச்சர் செந்தில்பாலாஜி மீது முழு நம்பிக்கை வைத்து கோவை மாவட்ட பொறுப்பாளராக நியமித்தது.  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கொங்கு மண்டலத்தை முழுமையாக கைப்பற்றுவதற்காக பொறுப்பு அமைச்சர்களும், அந்தந்த மாவட்ட அமைச்சர்களும், பல்வேறு வியூகங்களை அமைத்து தீவிரமாக தேர்தல் பணியாற்றினர்.

Also Read : சசிகலாவுக்கு செய்த துரோகம் துரத்திக்கொண்டே இருக்கும் -அ.தி.மு.க தோல்வி குறித்து கருணாஸ்

கொங்கு மண்டலத்தில் குறிப்பாக கோவை மாவட்டம் அதிமுகவின் கோட்டையாக இருந்தது . அதிமுகவில் அதிகாரமிக்க நிர்வாகியான எஸ்.பி.வேலுமணி, பாஜகவிற்கு கோவையில் உள்ள கணிசமான ஆதரவு ஆகியவற்றால் திமுகவிற்கு சவாலான மாவட்டமாக கோவை இருந்தது.

இந்நிலையில் நேற்று வெளியான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது. அதில் திருப்பூர் மாநகராட்சியில் 60 வார்டுகளில் திமுக கூட்டணி 37 வார்டுகளை வென்று மாநகராட்சி மேயர் பதவியை கைப்பற்றியுள்ளது. திருப்பூர் மாநகராட்சியில் 60% இடங்களை திமுக கைப்பற்றியுள்ளது.

ஈரோடு மாநகராட்சியில் 60 வார்டுகளில் 48 வார்டுகளை திமுக கூட்டணி கைப்பற்றி மேயர் பதவியை பிடித்துள்ளது. ஈரோடு மாநகராட்சியில் 80 சதவீத இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றி உள்ளது. சேலம் மாநகராட்சியில் 60 வார்டுகளில் 50 வார்டுகளை திமுக கூட்டணி கைப்பற்றி , முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த மாவட்டத்தில் மேயர் பதவியை கைப்பற்றியது. இதில் 83 சதவீத இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

புதிதாக உருவான கரூர் மாநகராட்சியில் 48 வார்டுகளில் 44 வார்டுகளில் திமுக கூட்டணி வென்று முதல் மேயர் பதவியை பிடித்துள்ளது. கரூர் மாநகராட்சியில் 90 சதவீத இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றியது.

தமிழகத்தில் இரண்டாவது பெரிய மாநகராட்சியான கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளில் 96 வார்டுகளை திமுக கூட்டணி கைப்பற்றி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. கோவை மாநகராட்சியில் 96 சதவீத வார்டுகளை திமுக கூட்டணி கைப்பற்றி உள்ளது. இதன் மூலம் கொங்கு மண்டலம் முழுக்கவே திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், அதிமுகவின் கோட்டை என்று கருதப்பட்ட கோவை அதிக இடங்களை வென்று முதல் இடத்தை பிடித்துள்ளது.

Also Read : பள்ளி பேருந்து சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு

சட்டமன்ற தேர்தலில் ஒரு இடத்தில் கூட திமுக கூட்டணி வெற்றி பெறாத கோவை மாவட்டத்தில், உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை திமுக பெற்றிருப்பதற்கு கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில்பாலாஜியின் அதிரடி வியூகங்கள்தான் காரணம் என்றும், இந்த அபார வெற்றி மூலம், அவரது செல்வாக்கு கோவை மாவட்ட திமுகவினர் மத்தியிலும், திமுக தலைமையிடமும் உயர்ந்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

திமுகவில் செந்தில் பாலாஜியின் திடீர் வளர்ச்சியை கண்டு எரிச்சலில் இருந்த திமுகவின் சீனியர்கள் கூட செந்தில் பாலாஜி குவித்திருக்கும் பெரிய வெற்றியை பார்த்து மலைத்து போயிருப்பதாக அறிவாலய வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
Published by:Vijay R
First published:

Tags: Coimbatore, Kongu Nadu, Local Body Election 2022, MK Stalin

அடுத்த செய்தி