Home /News /tamil-nadu /

கோவையின் முதல் பெண் மேயர் யார்.. கட்சிக்குள்ளும், வெளியிலும் நிலவும் போட்டி

கோவையின் முதல் பெண் மேயர் யார்.. கட்சிக்குள்ளும், வெளியிலும் நிலவும் போட்டி

கோவை மாநகராட்சி

கோவை மாநகராட்சி

Local Body Election 2022: கோவை மாநகர மேயர் பதவி தற்போது பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிமுக, திமுக கட்சிகள் கோவையின் முதல் பெண் மேயர் தங்கள் கட்சியைச் சேர்ந்தவராக இருக்கவேண்டும் என்பதை  வரலாற்றில் பதிவு செய்ய போட்டி போட்டு வருகின்றனர்.

மேலும் படிக்கவும் ...
  கோவை மாநகராட்சியின் முதல் பெண்  மேயர் யார் என்ற போட்டி திமுக, அதிமுக உள்ளிட்ட  கட்சிகளின் உள்ளேயேயும் வெளியேயும் பலமாக நிலவி வருவதால் மாநகராட்சித் தேர்தல் சூடு பிடித்துள்ளது.

  கோவை மாவட்டத்தில் உள்ள மாநகராட்சியில் 100 கவுன்சிலர்கள்,7 நகராட்சிகள் மற்றும் 33 பேரூராட்சிகள் என மொத்தம் 811 கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.
  நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் என்பதால் கோவையில் பலத்த போட்டி நிலவுகிறது.

  குறிப்பாக கோவை மாநகர மேயர் பதவி தற்போது பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிமுக, திமுக கட்சிகள் கோவையின் முதல் பெண் மேயர் தங்கள் கட்சியைச் சேர்ந்தவராக இருக்கவேண்டும் என்பதை  வரலாற்றில் பதிவு செய்ய போட்டி போட்டு வருகின்றனர்.  திமுகவில் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதியின் மகளான நிவேதா சேனாதிபதி 97-வது வார்டில் போட்டியிடுகிறார். இவரது பெயர் மாநகராட்சி மேயர் வேட்பாளர் வரிசையில் பேசப்படுகிறது.

  அதேபோல திமுக மாநகர் மாவட்டச் செயலாளர் சிங்காநல்லூர் கார்த்திக்கின் மனைவி இளஞ்செல்வியும் மேயர் வேட்பாளருக்கான போட்டியில் உள்ளார். மாநகராட்சி துணை மேயராக இருந்த கார்த்திக் எப்படியாவது இளஞ் செல்வியை மேயராக்க வேண்டும் என முனைப்பு காட்டி வருகிறார். மேலும் 46-வது வார்டில் போட்டியிடக் கூடிய மீனா லோகு ஏற்கனவே மாமன்ற உறுப்பினராகவும், மாநகராட்சியில் அனுபவம் மிகுந்தவராகவும் இருப்பதால் அவர் பெயரும் மேயர் வேட்பாளர் பட்டியலில் பேசப்படுகிறது.

  இதையும் படிங்க: போராட்டம் நடத்த சென்ற தமிழக விவசாயிகள் டெல்லி ரயில் நிலையத்தில் தடுத்து நிறுத்தம்


  அதே சமயத்தில் முன்னாள் வடவள்ளி பேரூராட்சி தலைவராக இருந்த அமிர்தவல்லி சண்முகசுந்தரமும் மக்கள் மற்றும் அரசியல் பலத்துடன்  38வது வார்டில் போட்டி போட்டு வருகிறார். இவரது பெயரும் மேயர் வேட்பாளர் பட்டியலில் பேசப்படுகிறது. இப்படி திமுகவில் நான்கு பெண்கள் மாநகராட்சி மேயராக வேண்டுமென்ற சிந்தனையோடு தங்களின் பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.

  அதேசமயத்தில் அதிமுகவில் 2 பெண் வேட்பாளர்களின் பெயர்கள் மேயர் வேட்பாளர்களாக அடிபடுகிறது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் நம்பிக்கை பாத்திரமாகவும் நமது அம்மா நாளிதழின் வெளியீட்டாளருமான சந்திரசேகரின் மனைவி சர்மிளாவின் பெயர்தான் மேயர் வேட்பாளராக பேசப்பட்டது. இவர் செல்லும் இடங்களில் எல்லாம் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

  மேலும் படிக்க: திமுகவும், அதிமுகவும் முதலில் மதுக்கடைகளை மூடுவதற்கு பொது விவாதம் நடத்த தயாரா? அன்புமணி கேள்வி


  இதுகுறித்து சர்மிளா சந்திரசேகர் கூறும்போது, ’என்னை மேயர் வேட்பாளராக அறிவிப்பதை தலைமைக்கழகம் தெரிவிக்கும். அதிமுக ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் மத்தியில் எங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இன்னும் அடிப்படை வசதிகள் சீரமைத்து கொடுக்கப்படும்.பொதுமக்கள் சீரான குடிநீர் வேண்டும் என தெரிவித்துள்ளனர் அதை செயல்படுத்துவோம். பட்டா, வேலைவாய்ப்பு, தெரு விளக்கு, குப்பைகளை அகற்றுதல் என மக்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்’ என்றார்.

  மேலும் படிங்க: நீட் தேர்வை தமிழக அரசு போல மற்ற மாநிலங்களும் எதிர்ப்பது முக்கியம்- யூ.ஜி.சி முன்னாள் தலைவர் வலியுறுத்தல்


  இதேபோல், கோவை புறநகர் வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் செந்தில் கார்த்திகேயனின் மனைவியும் மாநகராட்சி 7வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கிருபாலினி பெயரும் மேயர் வேட்பாளராக பேசப்படுகிறது.  இப்படி ஒருபுறம் இருக்க கோவை மாநகராட்சி 38 வது வார்டில் அதிமுக மேயர் வேட்பாளராக பேசப்படும் சர்மிளா சந்திரசேகருக்கும், திமுக மேயர் வேட்பாளராக பேசப்படும் அமிர்தவல்லி சண்முகசுந்தரத்திற்கும் நேரடியாக போட்டி நடைபெற்று வருகிறது.

  உட் கட்சிக்குள் மேயர் போட்டிகள் இருந்தாலும், 38வது வார்டில் மேயர் வேட்பாளர்களாக பேசப்படும் இருவரும் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று மக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வடவள்ளி முன்னாள் பேரூராட்சி தலைவராக இருந்த அமிர்தவள்ளி சண்முகசுந்தரம் தான் பொறுப்பில் இருந்தபோது செயல்படுத்திய வளர்ச்சிப் பணிகளை அறிவித்து மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார்.

  இதுகுறித்து அமிர்தவல்லி சண்முகசுந்தரம் கூறும்போது, எங்கள் வார்டு பொதுமக்கள் இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு கோரிக்கை வைத்துள்ளனர் அது நிறைவேற்றப்படும்.
  இந்தப் பகுதியில் சீரான குடிநீர் வினியோகம் இல்லை. தரமான சாலை வசதி இல்லை. இந்த கோரிக்கைகளை எல்லாம் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றுவோம்.
  அதேபோல இந்த வார்டுக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் காக்கப்படும்.

  மருதமலை கோயிலுக்கு தேவையான அடிப்படை வசதிகள், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, சீரான குடிநீர் ஆகியவை ஏற்படுத்தி தரப்படும். எங்கள் போட்டி கடுமையாக உள்ளது. மேயர் வேட்பாளர் குறித்த கேள்விக்கு திமுக தலைமையின் முடிவே எங்கள் முடிவு’ என்றார்.

  செய்தியாளர்: ஜெரால்ட் - கோவை
  Published by:Murugesh M
  First published:

  Tags: Coimbatore, Local Body Election 2022

  அடுத்த செய்தி