பொள்ளாச்சி அருகே ஆனைமலை பகுதியில் குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனமலை பகுதியில் வசித்து வரும் நாகராஜ் என்பவரது மகன் பரமேஸ்வரன் (வயது 27). இவர் ஆனைமலை மாசாணி அம்மன் கோவில் பகுதியில் தேங்காய் பழம் விற்கும் கடை நடத்தி வந்தார். பரமேஸ்வரன் வசிக்கும் குடியிருப்பின் அருகே இவரது சகோதரி பரமேஸ்வரியும் வசித்து வருகிறார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிப்பதில் பரமேஸ்வரிக்கும் அதே பகுதியில் வசித்து வரும் அகல்யா என்பவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது அகல்யாவின் கணவர் தமிழ்ச்செல்வனுக்கும் பரமேஸ்வரன் இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இதில் தமிழ்செல்வன், அவரது உறவினர் ராகவேந்திரன் உள்ளிட்ட சிலர் பரமேஸ்வரனை சராமரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் பரமேஸ்வரன் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.. பின்னர் அக்கம் பக்கம் உள்ள பொதுமக்கள் கொடுத்த புகாரையடுத்து அங்கு விரைந்து வந்த ஆனைமலை போலீசார் இறந்த பரமேஸ்வரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேட்டைக்காரன்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அகல்யா, அவரது தாயார் பானுமதி உள்ளிட்ட இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய தமிழ்ச்செல்வன், ராகவேந்திரன் உள்ளிட்ட அவரது உறவினர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
செய்தியாளர்: ம.சக்திவேல் (பொள்ளாச்சி)
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.