போதைமருந்தினை வயிற்றில் மறைத்து வைத்து கடத்திவந்த உகாண்டா நாட்டு பெண் வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளால் கோவை விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர். அவரது வயிற்றில் இருந்து 2.67 கோடி மதிப்புடைய 892 கிராம் மெத்தபேட்டமைன் என்ற போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை விமான நிலையம் வழியாக போதை மருந்து கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து கடந்த 6ம் தேதி வெளிநாடுகளிலிருந்து வந்த கோவை விமானங்களை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர்.
சவுதி அரேபியாவில் இருந்து ஏர் அரேபியா விமானத்தில் கோவை வந்த உகாண்டா நாட்டு பெண்மணியை சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவரை ஸ்கேன் சென்று பார்த்த போது அவரின் வயிற்றில் மாத்திரை போன்ற பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் பெயர் சான்ட்ரா நண்டிஷா என்பதும், மாத்திரை குப்பிகளில் போதை மருந்தை மறைத்து வைத்து கடந்தி வந்திருப்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து அவரை கடந்த 6 ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்த வருவாய் புலனாய்வு அதிகாரிகள் மருத்துவர்கள் உதவியுடன் பெண்ணின் வயிற்றில் இருந்த மாத்திரை குப்பிகளை வெளியில் எடுத்தனர்.
தினமும் அவருக்கு இனிமா கொடுத்து இயற்கையாக அந்த குப்பிகள் கழிவுகளில் வெளியில் வரும் வரை பொறுமையாக காத்திருந்து அவற்றை கைபற்றினர். மொத்தம் 81 மாத்திரை குப்பிகளை பறிமுதல் செய்தனர்.மாத்திரை குப்பிகளில் மெத்தபேட்டமைன் என்ற போதை மருந்து அடைத்து அதை விழுங்கியபடி கடத்தி வந்திருப்பதும், அந்த குப்பிகளில் இருந்த 892 கிராம் மெத்தபேட்டமைன் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
Also read... மூதாட்டியிடம் நகைபறிப்பு... சாப்பாடு போட்ட என்கிட்டயே நகை பறிச்சுட்டானே என கண்ணீர்
இதன் சர்வதேச மதிப்பு 2,67, 60,000 ரூபாய் என்பது தெரியவந்தது. திருப்பூருக்கு கார்மென்ட் தொழில் நிமித்தமாக வந்திருப்பதை போல காட்டிக்கொண்டு போதை பொருள் கடத்தி வந்திருப்பதும் தெரியவந்தது. அரசு மருத்துவமனையில் 4 நாட்களாக காத்திருந்து வயிற்றில் இருந்து மாத்திரை குப்பிகளை எடுத்த பின் ,சிகிச்சைக்கு அளிக்கப்பட்ட நிலையில் உகாண்டா நாட்டு பெண்ணை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இன்று கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அயன் படபாணியில் போதை மருந்து கடத்தப்பட்டு வந்தது குறித்து வருவாய் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.