கோவையில் சிலம்பாட்டம் பயிற்சியில் திருநங்கைகள்- சாதிக்க வாய்ப்பு தர கோரிக்கை

சிலம்பு பயிற்சியில் திருநங்கைகள்

கோவையில் திருநங்கைகள் சிலம்பாட்டம் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

  • Share this:
விளையாட்டு துறைகளில் திருநங்கைகளை கொண்டு வர வேண்டும் என்பதற்காக கோவையை சேர்ந்த பெண் உடற்பயிற்சி ஆசிரியர்கள் 7 பேர் இணைந்து தங்களது அறக்கட்டளை மூலம்  திருநங்கைகளுக்கு இலவசமாக சிலம்பாட்டம் கற்றுக்கொடுக்கின்றனர். திருநங்கைகளும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சிலம்பாட்டம் கற்று வருகின்றனர்.

கோவையைச் சேர்ந்த பெண் உடற்கல்வி ஆசிரியர்கள் 7 பேர் ஒன்றிணைந்து ’மங்கையானவன் ’ என்ற பெயரில் அறக்கட்டளை அமைத்து திருநங்கைகளை விளையாட்டு துறைக்குள் கொண்டு வர முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருநங்கைகளை சந்தித்து பேசி அவர்களிடம் விளையாட்டுகள் குறித்து ஆர்வம் ஏற்படுத்தி அவர்களுக்கு சிலம்பாட்டம் கற்றுக்கொடுத்து வருகின்றனர். கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த பிரபு என்கிற உடற்கல்வி ஆசிரியர் மங்கையானவன் அறக்கட்டளையுடன் இணைந்து திருநங்கைகளுக்கு சிலம்பு பயிற்சி அளித்து வருகின்றார்.

திருநங்கைகள்


இவரிடம் தற்போது 20க்கும் மேற்பட்ட திருநங்கைகள் சிலம்பாட்டம் பயிற்சி பெற்று வருகின்றனர். மற்றவர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் எதுவும் திருநங்கைகளுக்கு சென்று சேருவதில்லை என்பதால் அவர்களுக்கு உதவ, பெண் உடற்பயிற்சி ஆசிரியர்கள் நடத்தும் அறக்கட்டளைக்கு உதவ முன்வந்ததாகவும், திருநங்கைகள் மிக ஆர்வமாக சிலம்பாட்டத்தை கற்றுக்கொள்கின்றனர் எனவும்  , சொல்வதை உடனடியாக புரிந்து கொண்டு உடனே செய்கின்றனர் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ‘சிலம்பாட்டம் அவர்களின் எதிர் காலத்திற்கும், உடலுக்கும் நல்லது என்பதை புரிந்து கொண்டு பயிற்சி பெறுவதாக தெரிவித்தார்.

ஆண், பெண் விளையாட்டு துறையில் இருக்கும்போது, திருநங்கைகளையும் விளையாட்டு துறைக்குள் கொண்டு வர வேண்டும் என்பதற்காக முயற்சிகள் எடுத்து வருவதாகவும், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருநங்கைகளுக்கு த்ரோ பால் பயிற்சி அளித்தாகவும், தற்போது உடற்பயிற்சி ஆசிரியரும் சிலம்பாட்ட ஆசிரியருமான பிரபு மூலம் சிலம்பாட்டம் கற்று கொடுப்பதாகவும் மங்கையானவன் அறக்கட்டளை அமைப்பினர் தெரிவிக்கின்றனர்.

விளையாட்டு துறையில் ஆண்கள், பெண்களுக்கு இருப்பதைப்போல திருநங்கைகளுக்கும் இதுவரை தனி பாலினம் இல்லை எனவும் விளையாட்டு துறையில் திருநங்கைகளுக்கான தனி பிரிவு துவங்கப்பட வேண்டும் எனவும் பெண் உடற்பயிற்சி ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். திருநங்கைகள் மக்களிடம் இருந்து தனியாக தெரிவதற்கு முதல் காரணம் அவர்களது உடல் மொழி எனவும், அவர்கள் விளையாட்டு வீரர்களாக மாறினால் திருநங்கைகளின்  உடல் மொழியிலும் மாற்றம் இருக்கும் என அறக்கட்டளை நடத்தும் பெண் உடற் கல்வி ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

சிலம்பாட்டம் ஆட வேண்டும் என்பது தங்களது விருப்பம் எனவும் ஆனால் யாரும் சேர்த்துக்கொள்ளாதால் வாய்ப்பு இல்லாமல் போனதாகவும் இப்போது சிலம்பாட்டம் ஆட வாய்ப்பு கிடைத்து இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவிக்கும் திருநங்கைகள், விளையாட்டு துறைக்கு வந்துள்ள தங்களை போன்றவர்களுக்கு தனியாக இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும் எனவும் திருநங்கைகள் வலியுறுத்துகின்றனர்.

திருநங்கைகளுக்கு இப்போது விழிப்புணர்வு ஏற்பட துவங்கி இருப்பதாகவும், தங்களை ஊக்கப்படுத்த அரசு உதவ வேண்டும் என தெரிவிக்கும் திருநங்கைகள் ஆண்கள்,பெண்களுக்கு ஆகியோருக்கு நிகராக விளையாட்டு துறையில் தங்களால் சாதிக்க முடியும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இது அடுத்த திருநங்கைகளுக்கும் முன்னுதாரணமாக இருக்கும் எனவும் திருநங்கைகள் தெரிவிக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிலம்பாட்டம் மட்டும் இன்றி பல்வேறு விளையாட்டுகளில் திருநங்கைகள் ஆர்வமாக இருப்பதாகவும் ஆண்கள் ,பெண்களை போலவே திருநங்கைகளாலும் விளையாட்டு துறையில் சாதிக்க முடியும் எனவும் எங்களுக்கும் ஆசையுண்டு அதை நிறைவேற்ற தமிழக அரசு உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் திருநங்கைகளுக்கு தனிபிரிவு விளையாட்டு துறையில் ஏற்படுத்த வேண்டும் என அவர்கள்  தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Published by:Karthick S
First published: