ஆன்மீக பெரியோர்களின் நம்பிகையை பெறும் அளவிற்கு தமிழக அரசு செயல் பட வேண்டும்: வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்

தமிழக அரசு உண்மையாகவே இந்து கோவில்களின் மீது அக்கறை இருந்தால், கோவில் சொத்துகள், நிலங்களை இந்துக்கள் அல்லாதவர்களிடம் இருந்து மீட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

 • Share this:
  இந்து ஆலயங்களில் நடைபெறும் அனைத்து முறைகேடுகளையும் தடுத்தி நிறுத்தி ஆன்மீக பெரியோர்களின் நம்பிகையை பெறும் அளவிற்கு அரசு செயல் பட வேண்டும் என பா.ஜ.க மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

  கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியின் புதிய சட்டமன்ற உறுப்பினராக வானதி சீனிவாசன் கடந்த மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து தெற்கு தொகுதி சட்டமன்ற  அலுவலகத்தில் இன்று பூஜை செய்த பின் அலுவலகத்திற்கு கணவருடன் வானதி சீனிவாசன் வந்தார். சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் "தனலாபம்" என எழுதி பூஜைகள் செய்த பின்னர் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மூத்த கட்சி நிர்வாகிகளின் காலில் விழுந்து ஆசீ்ர்வாதம் வாங்கிய வானதி சீனிவாசனுக்கு இந்துமுன்னணி மற்றும் பா.ஜ.க நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.

  பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானதி சீனிவாசன், இந்து அறநிலையத்துறை அமைச்சர், கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது, அனைத்து சாதியினரும் அர்ச்சகராக பயிற்சி அளிப்பது, பெண்களும் அர்ச்சகராலம் என சொல்லியிருப்பதெல்லாம் நீண்ட காலமாக நடந்து வரும் விஷயங்கள்தான் என தெரிவித்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  விஷ்வ ஹிந்து பரிஷத் நீண்ட காலமாக அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக பயிற்சி அளித்து வருவதாகவும், பல கோவில்களில் தமிழில் அர்ச்சனை தற்போதும் நடைபெற்று வருவதாகவும், பெண்கள் மேல்மருவத்தூர், மற்றும் பல்வேறு  சமுதாய கோவில்களில் பூஜை செய்து வருவதாகவும் கூறிய அவர், இதில் தமிழக அரசு புதிதாக எதையும் செய்யவில்லை என தெரிவித்தார்.

  அதே வேளையில் ஆகம கோவில்களில் ஆகம விதிப்படி தான் பூஜைகள் செய்ய வேண்டும் என கூறிய அவர், பக்தர்களின் உணர்வு, கோவில் நிர்வாகத்தின் ஆலோசானையின் படி கேட்டு, அவர்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தி நடக்க வேண்டும் என்றார்.

  திமுக இந்துக்களுக்கும், இந்து கடவுள்களுக்கும் எதிரானவர்கள் என்பதை அவர்களே பல முறை சொல்லி இருப்பதாகவும் இந்து சமய அற நிலையத்துறையில் தற்போது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தன்னிச்சையானதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

  Also read: ‘பிரதமர் மோடி குறித்து திமுகவினர் மட்டும் பொய் பேசலாமா?’: கிஷோர் கே.சாமி கைதுக்கு காயத்ரி ரகுராம் கண்டனம்!

  தமிழக அரசு உண்மையாகவே இந்து கோவில்களின் மீது அக்கறை இருந்தால், கோவில் சொத்துகள், நிலங்களை இந்துக்கள் அல்லாதவர்களிடம் இருந்து மீட்க வேண்டும். இந்து ஆலயங்களில் நடைபெறும் அனைத்து முறைகேடுகளையும் தடுத்தி நிறுத்தி ஆன்மீக பெரியோர்களின் நம்பிக்கையை பெறும் அளவிற்கு அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

  சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் முன்பு வாழைமர தோரணங்கள் கட்டப்பட்டு புதுமனை புகு விழாவை போல சட்டமன்ற அலுவலக திறப்பு விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
  Published by:Esakki Raja
  First published: