பொள்ளாச்சியில் சுப்பிரமணிய சாமிக்கு எதிராக தமிழ்நாடு திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்!

தமிழக திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரத்தில், தமிழக அரசு உள்நோக்கத்தோடு செயல்படுவதாகத் தெரிய வந்தால், தமிழக அரசு கலைக்கப்படும் என்று சுப்பிரமணிய சாமி தெரிவித்திருந்தார்.

  • Share this:
    பொள்ளாச்சியில் சுப்பிரமணிய சாமியின் உருவப் படத்தை செருப்பால் அடித்தும், கிழித்தும் தமிழ்நாடு திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள திமுக தலைமையிலான அரசு குறித்து கடந்த சில நாட்களாகவே சுப்பிரமணியன் சுவாமி பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.

    பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரத்தில், தமிழக அரசு உள்நோக்கத்தோடு செயல்படுவதாகத் தெரிய வந்தால், தமிழக அரசு கலைக்கப்படும் என்றும் ஜெர்மனியின் நாஜி ஆட்சியை நினைவுபடுத்துவதாக உள்ளது என்றும் ட்விட்டர் பதிவில் கூறியிருந்தார்.

    இந்நிலையில், இன்று காலை அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 2019ம் ஆண்டுக்கு முந்தைய காஷ்மீர் வகை தேசிய எதிர்ப்பு எழுச்சியின் அச்சுறுத்தலில் தமிழகம் இன்று உள்ளது. தமிழக முதல்வர் இது தொடர்பாக ரா அமைப்பு, உளவுத் துறைக்கு ஆவணம் வழங்க வேண்டும் . மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதற்கு பதிலாக, மத்திய அரசு சி.ஆர்.பி.எஃப் மற்றும் பி.எஸ்.எஃப் மத்திய படைகளை மதுரைக்கு அருகிலுள்ள மூன்று மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இந்நிலையில், சுப்பிரமணியன் சுவாமியின்  கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பொள்ளாச்சி அருகே உள்ள காளியப்பன்கவுண்டன் புதூரில் தமிழ்நாடு திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிராக கோஷம் எழுப்பிய தமிழ்நாடு திராவிடர் கழகத்தினர் அவரது திருவுருவப் படத்தை செருப்பால் அடித்து கிழித்து கண்டனத்தை வெளிப்படுத்தினர்.

    செய்தியாளர் - ம.சக்திவேல்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Esakki Raja
    First published: