கர்நாடகா மாநிலம் மைசூரு ஒஞ்சூர் கல்லாழி பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்தவர்கள் 39 வயதான மணிகண்டன் 27 வயதான சங்கீதா தம்பதி. இவர்களுக்கு 5 மாத பெண் குழந்தை உள்ளிட்ட 4 குழந்தைகள் உள்ளனர்.
நாடோடி வாழ்க்கை வாழும் இந்த தம்பதி தங்கள் குழந்தைகளுடன் மைசூரில் இருந்து ஆனைமலைக்கு கடந்த செவ்வாய்க்கிழமை வந்துள்ளனர். அங்குள்ள பயணிகள் நிழற்குடை அருகே தஞ்சமடைந்திருந்தனர்.
இந்த நிலையில், புதன்கிழமை இரவு அங்கு சென்ற அடையாளம் தெரியாத நபர் ஒருவர், 5 மாத பெண் குழந்தையை விலைக்குத் தர முடியுமா எனக் கேட்டுள்ளார்; ஆனால் தம்பதி மறுத்து விட்டனர்.
பின்னர் சங்கீதா கைக்குழந்தை மற்றும் இன்னொரு பெண் குழந்தையுடன் சாலையோரம் உள்ள சிற்றுண்டி கடைக்கு சென்றுள்ளார்.
பின் தொடர்ந்து சென்ற அந்த நபர், சங்கீதாவிடம் பேச்சுக் கொடுத்துப் பழக்கம் ஆகியுள்ளார். பின்னர் குழந்தையைத் தான் பார்த்துக் கொள்வதாகவும், உணவு வாங்கி விட்டு வந்து வாங்கி்க் கொள்ளும்படியும் சங்கீதாவிடம் கூறியுள்ளார்.
அதை நம்பிய சங்கீதாவும் குழந்தையை அந்த நபரிடம் கொடுத்து விட்டு உணவு வாங்குவதில் கவனம் செலுத்தியுள்ளார். அந்த நேரத்தில் அந்த நபர், இருசக்கர வாகனத்தில் வந்த இன்னொரு நபருடன் வாகனத்தில் ஏறித் தப்பிச் சென்று விட்டார்.
இதையடுத்து ஆனைமலை காவல்நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவிக்களின் காட்சிகளின் அடிப்படையில் அங்கலக்குறிச்சியில் பதுங்கியிருந்த 49 வயதான ராமர், 39 வயதான முருகேசன் ஆகிய இருவரையும் போலீசார் பிடித்தனர்.
விசாரணையில், மணிகண்டன் - சங்கீதா தம்பதி ஊருக்குள் வந்ததில் இருந்து அவர்களை இருவரும் கண்காணித்து வந்துள்ளனர். பின்னர் அவர்களிடம் இருந்து ஒரு குழந்தையை எப்படியாவது வாங்கி விட வேண்டும் என்ற எண்ணத்தில் பேச்சுக் கொடுத்துப் பழகியுள்ளனர்.
அதன்பின்னரே குழந்தையைக் கடத்திச் சென்று, அங்கலக்குறிச்சியைச் சேர்ந்த 51 வயதான முத்துப்பாண்டி என்பவரிடம் 90 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து ராமர், முருகேசன் மற்றும் குழந்தையை வாங்கிய முத்துப்பாண்டி ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். குழந்தை கடத்தப்பட்டு 3 நாட்களில் மீட்கப்பட்டதற்கு, தனிப்படை காவல்துறையினருக்கு காவல் உயரதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்னளர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Girl Child